ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் ஒரு டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி நொய்டாவில் தொடங்கியது. ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு பாதுகாப்பு பிரச்சினைகளால் வெளிநாட்டு அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவதில்லை. அதனால் கடந்த சில வருடங்களாகவே ஆப்கானிஸ்தான் தங்களுடைய சொந்த மண் போட்டிகளை இந்தியாவில் விளையாடுவதற்கு பிசிசிஐ உதவி செய்து வருகிறது.
அந்த வகையில் நியூசிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் விளையாடும் போட்டியை நொய்டாவில் நடத்த பிசிசிஐ உதவி செய்தது. ஆனால் அந்தப் போட்டி தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது செப்டம்பர் எட்டாம் தேதியே நொய்டாவில் பலத்த மழை பெய்தது. இருப்பினும் செப்டம்பர் 9ஆம் தேதி காலை மழை ஓய்ந்த பின்பும் தண்ணீரை வெளியேற்றுவதற்கு தேவையான வசதிகளும் எந்திரங்களும் நொய்டா மைதானத்தில் இல்லை.
சர்ச்சை மைதானம்:
அதனால் முதல் நாள் போட்டி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. ஆனால் 2வது நாளில் மழை ஒரு துளி கூட பெய்யவில்லை. இருப்பினும் ஏற்கனவே மைதானத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றுவதற்கு போதுமான வசதிகள் இல்லை. அதனால் பராமரிப்பாளர்கள் வாலியில் பிழிந்து எடுத்தும் மின்சார காற்றாடிகளை பயன்படுத்தியும் தண்ணீரை வெளியேற்ற போராடினர்.
இருப்பினும் மைதானத்தின் ஈரப்பதத்தை சரி செய்ய முடியாததால் மழை பெய்யாமலேயே முதல் 2 நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. அதனால் பணக்கார வாரியமான பிசிசிஐ ஆப்கானிஸ்தானுக்கு இப்படி ஒரு அடிப்படை வசதிகள் இல்லாத மைதானத்தை கொடுக்கலாமா? என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் நொய்டா மைதானத்தை தாங்கள் தான் கேட்டு பெற்றதாகவும் மழை பெய்ததால் பிசிசிஐ மீது எந்த தவறுமில்லை என்றும் ஆப்கானிஸ்தான் வாரியம் தெரிவித்துள்ளது.
மழைக்கு என்ன செய்வது:
அதே சமயம் நொய்டா மைதானத்தின் வசதிகள் மோசமாக இருப்பதாகவும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் ஆப்கானிஸ்தான் வாரியம் இது பற்றி வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு. “நீங்கள் எங்களை நம்ப மாட்டீர்கள். ஆப்கானிஸ்தானில் இதை விட நல்ல வசதிகள் கொண்ட மைதானம் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக நாங்கள் வசதிகளை முன்னேற்றியுள்ளோம்”
இதையும் படிங்க: தோனி இருந்தாலும் சரி.. சி.எஸ்.கே அந்த விக்கெட் கீப்பரை எடுக்க திட்டம் போட்டிருக்கு – யார் அந்த வீரர் தெரியுமா?
“முதலில் நாங்கள் லக்னோ மற்றும் டேராடூன் மைதானங்களை விருப்பமாக கொண்டிருந்தோம். ஆனால் அங்கே டி20 தொடர்கள் நடைபெறுவதால் மறுத்த பிசிசிஐ பெங்களூரு, கான்பூர், நொய்டா மைதானங்களை கொடுத்தது. அதில் நொய்டாவை போக்குவரத்து வசதிக்கு எளிதாக இருக்கும் என்பதால் நாங்கள் தேர்வு செய்தோம். இருப்பினும் மழையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. நிலைமைகளை சரி செய்ய பிசிசிஐ எக்ஸ்ட்ரா எந்திரங்களை வழங்கியுள்ளது. எனவே மழை ஒதுங்கி போட்டி நடைபெறும் என்று நம்புகிறோம்” என கூறியுள்ளது.