ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அத்தொடரில் தோல்வியை சந்திக்காமல் அசத்திய இந்தியா ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்த தொடர் தோல்விகளையும் உடைத்தது.
முன்னதாக 2023 உலகக் கோப்பையில் சொந்த மண்ணில் ரோஹித் சர்மா தலைமையில் தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்ற இந்தியா எதிரணிகளை தெறிக்க விட்டு ஃபைனலுக்கு சென்றது. அதனால் 2011 போல கண்டிப்பாக இந்தியா சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மாபெரும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா 240 ரன்கள் மட்டுமே அடித்தது.
வீழ்த்திய சுகம்:
அதனால் இந்தியா தோல்வியை சந்தித்தது கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. அப்போட்டிக்கு முன்பாக அகமதாபாத் மைதானத்தில் இந்தியாவை வீழ்த்தி ஒரு லட்சம் இந்தியர்களை அமைதியாக்கி கோப்பையை வெல்வோம் என்று சொன்னதை ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் செய்து காண்பித்தார்.
இந்நிலையில் சொந்த மண்ணில் நடைபெற்றதால் 2023 உலகக் கோப்பை நமக்குத் தான் என்று இந்திய ரசிகர்கள் நினைத்ததாக ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜாம்பா தெரிவித்துள்ளார். ஆனால் கடைசியில் இந்திய ரசிகர்களுக்கு முன்னிலையில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து கோப்பையை வென்றதை விட தமது கேரியரில் ஒரு சுகமான உணர்வு இருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி யூடியூப் நிகழ்ச்சியில் ஜாம்பா பேசியது பின்வருமாறு.
“இந்தியாவிற்கு உலகக் கோப்பை ஒரு தட்டில் கொடுக்கப்பட்டது போல அவர்களின் ரசிகர்கள் நினைத்தார்கள் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவை வீழ்த்துவதற்கு ஏதோ ஒரு அதிசயம் நடக்க வேண்டும் என்பது போல் அன்றைய சூழ்நிலை இருந்தது. அங்கே 1,20,000 இந்தியர்கள் காத்திருந்தனர். ஏற்கனவே நான் சொன்னது போல் அது இந்தியா வெல்வதற்கான கோப்பை என்று அவர்கள் நினைத்தனர்”
இதையும் படிங்க: நம்பலனாலும் தீக்சனா சொன்னது நிஜமான நிலைமை.. இலங்கை அதை வெச்சு இந்தியாவை சாய்ச்சுட்டாங்க.. அஸ்வின் பேட்டி
“ஆனால் கடைசியில் வெறும் 240 ரன்களை மட்டுமே அடிப்பதற்காக மைதானத்திற்கு சென்ற போது எங்களுக்கு ஒரு திருப்தி இருந்தது. அங்கேயும் நாங்கள் 3 விக்கெட்டுகளை இழந்த போது அங்கும் இங்கும் ஸ்விங் பந்துகள் பறந்த சூழ்நிலையை உணர்ச்சியுடன் பார்த்தது கடினமாக இருந்தது. ஆனால் விரைவில் டிராவிஸ் ஹெட் – மார்னஸ் லபுஸ்ஷேன் அனைத்தையும் கட்டுப்படுத்தி விளையாடியது திருப்தியை கொடுத்தது. இறுதியில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் அவர்களின் ரசிகர்களுக்கு முன்னிலையில் வீழ்த்தியதை விட வேறு சிறந்த உணர்வு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” எனக் கூறினார்.