உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலககோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்குகிறது. வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக கோப்பையை தக்க வைக்க களமிறங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியா உட்பட மொத்தம் 16 அணிகள் 45 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்த தொடரின் கோப்பையை வெல்லப் போவது யார் மற்றும் இந்த தொடரில் தங்களுக்கு நாட்டுக்காக கோப்பையை வெல்ல அற்புதமாக செயல்படப் போவது யார் என்ற கணிப்புகளை கடந்த ஒரு மாதமாகவே முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் ஜாம்பவான் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தங்களது நாட்டில் நடைபெறும் உலக கோப்பையில் அசத்தப்போகும் 5 தரமான வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் விக்கெட் கீப்பர்களின் அடிப்படை இலக்கணத்தை மாற்றிய மகத்தான ஜாம்பவானாக போற்றப்படும் அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் கொடுத்த சமீபத்திய பேட்டியில் 5 வீரர்களையும் தேர்வு செய்து பேசியது பின்வருமாறு.
1. டேவிட் வார்னர்: கடந்த உலக கோப்பையில் அற்புதமாக செயல்பட்டு முதல் முறையாக ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பையை வெல்ல தொடர் நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றிய இவரை முதலாவதாக தேர்வு செய்து கில்கிறிஸ்ட் பேசியது பின்வருமாறு.
“அவர் டாப் ஆர்டரில் இருப்பவர். அனைத்து போட்டிகளிலும் அதிரடியான தொடக்கத்தை பெறவேண்டும் என்ற அணுகு முறையை கொண்டிருக்கும் அவருக்கு கடந்த உலக கோப்பையில் அபாரமாக செயல்பட்ட மிகப்பெரிய தன்னம்பிக்கை இம்முறை சொந்த மண்ணில் மேலும் அதிகமாக உதவும்” என்று கூறினார்.
2. பாபர் அசாம்: சமீப காலங்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தானின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் முன்னேறியுள்ள இவரை தேர்வு செய்து கில்கிறிஸ்ட் பேசியது பின்வருமாறு.
“அவர் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் அசத்தும் திறமை பெற்றுள்ளார். அதே சமயம் டி20 கிரிக்கெட்டில் அனைத்து விதமான காலச் சூழ்நிலைகளிலும் அனைத்து வித சவாலான சூழ்நிலைகளையும் சிறப்பாக எதிர்கொள்ளும் திறமையும் அவரிடம் உள்ளது என்று நினைக்கிறேன்” எனக்கூறினார்.
3. ஹர்டிக் பாண்டியா: இது போன்ற பட்டியலில் இந்தியாவின் சார்பில் தற்சமயத்தில் உச்சகட்ட பார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவை அனைவரும் தேர்வு செய்யும் நிலையில் அவரைவிட பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என 3 துறைகளிலும் அசத்தக்கூடிய பாண்டியாவை தேர்வு செய்துள்ள கில்கிறிஸ்ட் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“பாண்டியா அனைத்து நாடுகளுக்கிடையே மிகவும் திறமை வாய்ந்த நட்சத்திரமாக திகழ்கிறார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் நம்மை மகிழ்ச்சிப் படுத்தும் திறமை பெற்றுள்ள அவர் நிச்சயமாக உலக கோப்பையிலும் அசத்துவார்” என்று கூறினார்.
4. ரசித் கான்: உலகின் அனைத்து பிரீமியர் லீக் டி20 தொடர்களிலும் ஏற்கனவே அற்புதமாக செயல்பட்டு உலகின் நம்பர் ஒன் டி20 பந்துவீச்சாளராக கருதப்படும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இவரை தேர்வு செய்து கில்கிறிஸ்ட் பேசியது பின்வருமாறு.
“அவர் உலகில் நடைபெறும் அத்தனை டி20 தொடர்களிலும் களமிறங்கும் அணியில் இருப்பார் தானே? உலக அளவில் டி20 கிரிக்கெட்டில் அவர் தான் இந்த வருடத்தின் சிறந்த வீரர். இன்னும் சொல்ல வேண்டுமெனில் கடந்த தசாப்தம் முழுவதும் அசத்தி வரும் ரசித் கான் நிச்சயம் உலக கோப்பையிலும் அசத்துவார்” என்று கூறினார்.
5. ஜோஸ் பட்லர்: இங்கிலாந்தைச் சேர்ந்த அதிரடி தொடக்க வீரரான இவர் ஐபிஎல் 2022 தொடரில் ரன் மெஷினாக 800+ ரன்களைக் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று நல்ல பார்மில் இருப்பதுடன் இம்முறை கேப்டனாக உலக கோப்பையில் களமிறங்குகிறார். அவரை தேர்வு செய்து கில்கிறிஸ்ட் பேசியது பின்வருமாறு.
“அவர் பேட்டிங்கில் மிகப்பெரிய எடையை ஏற்படுத்துவார் என்பது எனக்கு தெரியும். அனைத்து சூழ்நிலைக்கும் தன்னை உட்படுத்திக் கொள்ளும் திறமை பெற்றுள்ள அவர் அதிரடியாகவும் பவராகவும் அடிக்கும் திறமையும் பெற்றுள்ளார். அவரிடமிருந்து ஒரு எளிமையான அதிரடி ஆட்டம் போட்டியை முடிப்பதற்கு போதும்” என்று கூறினார்.



