ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் இந்திய அணி சார்பாக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர் அபிஷேக் சர்மா 314 ரன்கள் குவித்து நடப்பு ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக முதலிடத்தை பிடித்ததோடு தொடர் நாயகன் விருதினையும் வென்றிருந்தார்.
சூரியகுமார் எனக்கு குடுத்த அட்வைஸ் இதுதான் : அபிஷேக் சர்மா
கடந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்த கையோடு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்த வேளையில் அவருக்கு பதிலாக மாற்று வீரராக இந்திய டி20 அணியில் இடம் பிடித்திருந்த அபிஷேக் ஷர்மா தொடர்ச்சியாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அடுத்த 2026 டி20 உலக கோப்பை தொடரின் துவக்க வீரராக இவரே விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவ் தனக்கு எந்த அளவில் ஆதரவு கொடுத்தார்? என்பது குறித்தும், சூரியகுமார் யாதவ் தான் இந்திய அணிக்கு வந்தபோது என்ன கூறினார்? என்பது குறித்தும் அபிஷேக் சர்மா சில வெளிப்படையான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் இந்திய அணிக்காக தேர்வான போது வங்கதேச அணிக்கு எதிரான தொடரின் மூன்று நான்கு ஆட்டங்களில் வெகு விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினேன். அதனால் என்னுடைய இடம் பறிபோகிவிடுமோ என்ற பயம் இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் என்னிடம் வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் என்னிடம் :
நீ இந்திய அணியில் என்னை பொறுத்தவரை முக்கியமான ஒரு வீரர். நீ 15 முறை டக் அவுட்டானாலும் எனக்கு பரவாயில்லை. 16-வது ஆட்டத்திலும் நீ விளையாடுவாய் அந்த உறுதியை நான் உனக்கு அளிக்கிறேன் என்று என்னிடம் கூறினார். உடனே நானும் அவரிடம் உண்மையாகத்தான் சொல்கிறீர்களா? என்று கேட்டேன்.
இதையும் படிங்க : 3 ஆவது சுழற்பந்து வீச்சாளராக அக்சர் படேலை தாண்டி குல்தீப் யாதவ் இடம்பெற இதுவே காரணம் – விவரம் இதோ
அவரும் ஆம் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். இப்படி ஒரு கேப்டன் நம் மீது நம்பிக்கை வைப்பது சாதாரண விடயம் கிடையாது. எனவே அவர் கொடுத்த இந்த சுதந்திரம் தான் என்னுடைய திட்டத்தை மிகத் தெளிவாக வைத்து அதிரடியாக விளையாட உதவி வருவதாக அபிஷேக் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.



