ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு இத்தொடரில் இந்தியா களமிறங்கியது. இருப்பினும் சீனியர்கள் இல்லாமல் இளம் வீரர்களுடன் விளையாடிய இந்தியா முதல் போட்டியிலேயே 116 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் பரிதாபமாக தோற்றது.
அதனால் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத ஜிம்பாப்வே அணியிடம் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா தோல்வியை சந்தித்ததாக எதிரணி ரசிகர்கள் கிண்டலடித்தனர். இருப்பினும் அங்கிருந்து அசத்தலாக விளையாடிய இந்தியா அதற்கடுத்த 4 போட்டிகளில் வென்று கோப்பையை முத்தமிட்டு தங்களை சாம்பியன் என்பதை நிரூபித்தது. இத்தொடரில் அபிஷேக் சர்மா, ரியான் பராக் போன்ற சில இளம் வீரர்கள் அறிமுக வாய்ப்பை பெற்றனர்.
வாழ்த்திய அபிஷேக்:
அந்த வாய்ப்பை அபிஷேக் ஷரமா அற்புதமாக பயன்படுத்தினார் என்று சொல்லலாம். ஏனெனில் முதல் போட்டியில் டக் அவுட்டான அவர் தான் 2வது போட்டியில் ஜிம்பாப்வே அணியை அடித்து நொறுக்கி 100 (47) ரன்கள் விளாசி இந்தியாவை 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து கம்பேக் கொடுக்க வைத்தார். குறிப்பாக 82 ரன்களில் இருந்து போது ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் அவர் சதத்தை தொட்டது ரசிகர்களை பிரமிக்க வைத்தது.
இந்நிலையில் 2024 உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடரில் பாகிஸ்தானை தோற்கடித்து கோப்பையை வென்ற தம்முடைய குருவான யுவராஜ் சிங்கிற்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த அடுத்த நாளே இரண்டாவது போட்டி நடைபெற்றது தான் சூட்டோடு சூடாக விளையாடி இந்தியா கம்பேக் கொடுக்க உதவியதாகவும் அபிஷேக் கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு.
“கடந்த 2 போட்டிகளாக பிட்ச் பவுலிங் செய்வதற்கு நன்றாக இருந்தது. முதல் போட்டி நடந்த அடுத்த நாளே 2வது போட்டி நடைபெற்றதே கம்பேக் கொடுப்பதற்கு நேர்மறையாக அமைந்தது. ஏனெனில் 2வது நாளே போட்டி நடைபெற்றதால் தோல்வியைப் பற்றி சிந்திக்க எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடரின் போதே நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் அது கனவு நிஜமான தருணமாக இருக்கும் என்று பேசினோம்”
இதையும் படிங்க: பர்ஸ்ட் மேட்ச்ல தோத்ததுக்கு அப்புறம் நாங்க பண்ண இந்த விஷயம் அசத்தலா இருந்தது.. தொடர் வெற்றி குறித்து – கில் மகிழ்ச்சி
“ரியான் பராக்கும் நானும் நீண்ட காலத்திற்கு முன் பேசியது தற்போது நடந்துள்ளது. எங்களை நம்பி வாய்ப்பு கொடுத்த கேப்டன் மற்றும் பயிற்சியாளரை இங்கே குறிப்பிட விரும்புகிறோம். முதல் 2 போட்டிகளில் எனது பவுலிங் நன்றாக இல்லாததால் அதில் வேலை செய்தேன். லெஜெண்ட்ஸ் தொடரை பார்த்தோம் அது எப்போதும் ஸ்பெஷல். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக ஃபைனலில் விளையாடும் போது இன்னும் ஸ்பெஷல். யுவி பாஜிக்கு வாழ்த்துக்கள்” என்று கூறினார்.



