
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டியில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 246 ரன்கள் என்கிற பிரமாண்ட இலக்கினை 18.3 ஓவர்களிலேயே சேசிங் செய்து அசத்தலான வெற்றியை பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச சேசிங்கை வெற்றிகரமாக பதிவு செய்த சன் ரைசர்ஸ் அணி இந்த தொடரில் இரண்டாவது வெற்றியையும் பெற்று அசத்தியது.
இந்த போட்டியின் போது சன் ரைசர்ஸ் அணியின் சார்பாக துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 55 பந்துகளை சந்தித்து 14 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் என 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது இந்த ஆட்டம் அந்த அணியை மிகச்சிறப்பான வெற்றிக்கு அழைத்துச் சென்றதோடு சேர்த்து அவருக்கு ஆட்டநாயகன் விருதினையும் பெற்று தந்திருந்தது.
இந்நிலையில் இந்த போட்டியில் நான் அடித்த 141 ரன்கள் என் தந்தைக்கு பத்தாது என்றும் அவர் நிச்சயம் இதில் திருப்தியடைந்திருக்க மாட்டார் என்று அபிஷேக் ஷர்மா சில சுவாரஸ்யமான கருத்துக்களை போட்டி முடிந்த பின்னர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : உண்மையிலேயே இந்த சதம் எனக்கு ஸ்பெஷலான ஒன்று.
14 வயதுக்கு உட்பட்டோர் அணியிலிருந்து நான் விளையாடும் போட்டிகளை எனது பெற்றோர்கள் நேரில் வந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் எப்போது மைதானத்தில் விளையாடினாலும் எனது பெற்றோர்களை கேமராவில் காண்பித்தால் அவர்கள் என்னை நோக்கி இந்த ஷாட்டை விளையாடு, அந்த ஷாட்டை விளையாடு என்று ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதிலும் குறிப்பாக எனது தந்தை தான் என்னுடைய முதல் பயிற்சியாளர்.
அவர் எப்பொழுது என்னை மைதானத்தில் நேரில் பார்த்தாலும் குறிப்பிட்ட ஷாட்டுகளை விளையாடும் படி என்னை வழிநடத்திக் கொண்டே இருப்பார். இந்த போட்டியில் நான் அடித்த இந்த ரன்கள் ஐபிஎல் தொடரில் எனது அதிகபட்ச ஸ்கோராக அமைந்திருக்கலாம். ஆனால் இந்த ரன்கள் நிச்சயம் என் தந்தைக்கு திருப்தியை தந்திருக்காது. ஏனெனில் எப்போதுமே என்னுடைய தந்தை போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்க வேண்டும் அதுதான் மிகச் சிறப்பான ஒன்று என்னிடம் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.
இதையும் படிங்க : 14 ஃபோர்ஸ் 10 சிக்ஸ்.. பஞ்சாப்பை சூறையாடிய அபிஷேக்.. ராகுல், ஸ்டோய்னிஸை மிஞ்சி.. சரவெடி சாதனை
அதனால் நான் இந்த போட்டியை வெற்றிகரமாக முடிக்காமல் ஆட்டமிழந்ததால் அவர் நிச்சயம் வருத்தம் அடைந்து இருப்பார். எனவே அவர் திருப்தியடைந்திருக்க மாட்டார் இருந்தாலும் என்னுடைய பெற்றோர்கள் மைதானத்தில் இருக்கும்போது நான் இப்படி ஒரு ஆட்டத்தை விளையாடியதில் மிகவும் மகிழ்ச்சி என அபிஷேக் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.