
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்றது. அத்தொடரின் முதல் மற்றும் கடைசிப் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் 3 மற்றும் 4வது போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற இந்தியா கோப்பையை வென்றது.
அத்தொடர் முழுவதும் அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தைக் கொடுத்து வெற்றியில் பங்காற்றி அபிஷேக் சர்மா தொடர்நாயகன் விருதை வென்றார். மறுபுறம் சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரை கழற்றி விட்ட பயிற்சியாளர் கௌதம் கம்பீர் துணைக் கேப்டன் சுப்மன் கில்லை ஓப்பனிங்கில் களமிறக்கியுள்ளார். அந்த வாய்ப்பில் கடந்த 2025 ஆசியக் கோப்பையிலும் ஆஸ்திரேலியா டி20 தொடரிலும் தடுமாற்றமாகவே விளையாடிய கில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.
அது மட்டுமின்றி அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவதற்கு தடுமாறிய அவர் காபாவில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் 6 பவுண்டரியுடன் 29* (16) ரன்களை 181.25 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார். இந்நிலையில் காபா போட்டியில் நெருப்புடன் நெருப்பாக மோதுவது போல் தமக்கு நிகராக சுப்மன் கில் அதிரடியாக விளையாடியதாக அபிஷேக் சர்மா பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“அது நெருப்புடன் நெருப்பாக விளையாடுவது போல் இருந்தது. இன்று கில் பேட்டிங் செய்த விதத்தைப் பாருங்கள். நாங்கள் 12 வயதிலிருந்தே ஒன்றாக விளையாடுகிறோம். எனவே எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. சுப்மன் கில் எம்மாதிரியான ஷாட்டை விளையாடப் பார்க்கிறார், எந்த பவுலரை டார்கெட் செய்ய முயற்சிக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அதே போல என்னுடைய ஆட்டத்தைப் பற்றி அவருக்குத் தெரியும்”
“அதனால் எம்மாதிரியான ஷாட்டுகளை நான் அடிக்க வேண்டும் என்பதிலும் அவர் எனக்கு உதவுகிறார்” என்று கூறினார். மொத்தத்தில் ஒருவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்தால் ஒரு கட்டத்துக்கு பின் சிறப்பாக விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதே போல சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை தடுமாற்றமாகவே விளையாடிய கில் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைப்பதால் விரைவில் அசத்த நல்ல வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: தல தோனியின் உலக சாதனையை சமன் செய்த டீ காக்.. கோலி, வில்லியம்சனை முந்தி 2வது வரலாற்று சாதனை
2026 டி20 உலகக் கோப்பையுடன் சூரியகுமார் யாதவ் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கப்பட உள்ளார். அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்க உள்ளார். அதனாலேயே தற்போது துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவர் விரைவில் சிறப்பாக விளையாடி ஓப்பனிங் இடத்தை தனதாக்குவது அவசியமாகிறது.