ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அந்தத் தொடரில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் குவித்த அபிஷேக் ஷரமா வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதால் தொடர்நாயகன் விருதை வென்றார். பஞ்சாப்பை சேர்ந்த அவர் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதனால் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஓப்பனிங்கில் எதிரணிகளை அடித்து நொறுக்கி வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக கடந்த வருடம் மும்பையில் இங்கிலாந்தை அடித்து நொறுக்கி அபிஷேக் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதனால் சர்வதேச டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதனை படைத்த அவர் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
எழுதி வைத்து அடிக்க:
முன்னதாக கடந்த ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் பஞ்சாப்பை சூறையாடி அபிஷேக் 141 (55) ரன்கள் விளாசி ஹைதராபாத்தை வெற்றி பெற வைத்தார். அந்தப் போட்டியில் சதத்தை அடித்த போது “இது ஆரஞ்சு படைக்காக” என்று அவர் தனது பாக்கெட்டில் எழுதி வைத்திருந்த பேப்பரை ஹைதராபாத் ரசிகர்களிடம் காட்டி சமர்ப்பித்தார். இந்நிலையில் அப்படி பேப்பரில் எழுதி வைத்து அடிப்பதை ஷிகர் தவான் தமக்குக் கற்றுக் கொடுத்ததாக அபிஷேக் தெரிவித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அபிஷேக் பேசியது பின்வருமாறு. “நம்முடையக் கனவுகளை வெளிப்படுத்துவது முக்கியம் என்று ஷிகர் தவான் என்னிடம் சொன்னார். நீங்கள் ஏற்கனவே சாதித்ததை வெளிப்படுத்துங்கள் என்று அவர் சொன்னார். ஒருமுறை என்னை அவருடைய வீட்டுக்கு அழைத்த அவர் அது பற்றி பேசினார். அவர் என்னை டைரியில் எழுதும் பழக்கத்தையும் செய்ய வைத்தார்”
கற்றுக்கொடுத்த தவான்:
“ஒன்று நான் செய்யக்கூடிய விஷயங்களை காட்சிப்படுத்துவேன். மற்றொன்று நான் செய்யும் விஷயங்களை காட்சிப்படுத்துவேன். குறிப்பாக தவான் என்னை நான் இந்தியாவின் சிறந்த வீரர், என்னுடைய அணிக்காக நிறைய போட்டிகளை வெல்வேன் என்ற வாசகங்களை எழுத வைத்தார். ஒவ்வொரு போட்டியின் காலையில் செய்திகளைப் படிப்பேன்”
இதையும் படிங்க: 160இல் 103 ரன்ஸ்.. தனியாளாக நியூஸிலாந்தை நொறுக்கிய மார்ஷ்.. 2005 பாண்டிங்கை முந்தி அபார சாதனை
“அதற்கு பதிலாக இப்போதெல்லாம் நான் ஒரு சிறிய தாளில் எழுதுவேன். எடுத்துக்காட்டாக “இது ஆரஞ்சுப் படைக்கானது” என்று எழுதி என்னுடைய பாக்கெட்டில் வைத்துக் கொள்வேன். அன்றைய நாளில் அரை சதமடித்த போது அதைக் காட்ட வேண்டும் என்ற நினைவு எனக்கில்லை. அதைத் தொடர்ந்து வைத்திருந்த நான் சதத்தை அடித்த போது பேப்பரை வைத்தது நினைவுக்கு வெளியே எடுத்தேன்” எனக் கூறினார்.



