
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 125 ரன்கள் மட்டுமே எடுத்து ஆரம்பத்திலேயே வெற்றியை கோட்டை விட்டது.
அதிகபட்சமாக உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்பதை நிரூபிக்கும் வகையில் அபிஷேக் சர்மா 68 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். மறுபுறம் 3 விக்கெட்டுகள் எடுத்த ஜோஸ் ஹேசல்வுட் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார். மிகவும் துல்லியமாக பவுலிங் செய்யக்கூடிய அவர் கடைசி 3 போட்டிகளில் விளையாட மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.
குறிப்பாக இன்னும் சில வாரங்களில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரில் களமிறங்க உள்ளது. அத்தொடருக்கு தயாராகும் நோக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான கடைசி 3 போட்டிகளிலிருந்து விலகி பயிற்சிகள் எடுக்க உள்ளதாக ஹேசல்வுட் அறிவித்துள்ளார். அவருடைய அறிவிப்பு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக அமைகிறது.
இந்நிலையில் ஜோஸ் ஹேசல்வுட் கடைசி 3 போட்டிகளிலிருந்து விலகுகிறாரா? என்று அபிஷேக் ஷர்மா மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மிகவும் நல்ல பவுலரான அவரை வெளுத்து வாங்க முயற்சித்ததாக அபிஷேக் கூறியுள்ளார். இருப்பினும் இதற்கு முன் பார்த்திராத வகையில் அவர் தமக்கு புதிய வழியில் சவாலைக் கொடுத்ததாக அபிஷேக் சர்மா பாராட்டியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஓ ஹேசல்வுட் விலகுகிறாரா? அது எனக்கு தெரியாது. அவர் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் விளையாட போதுமானவர். இந்த சவாலை நான் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்கிறேன். ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை எதிர்கொள்ள வேண்டும். அதையே நானும் முயற்சிக்கிறேன். ஒரு பேட்ஸ்மேனாக கடந்த ஒருநாள் தொடரில் ஹேசல்வுட் வெளிப்படுத்திய ஆட்டத்தைப் பார்த்தேன்”
இதையும் படிங்க: கம்பீர் அவரை கழற்றி விட்டா இந்தியாவால் ஜெய்க்க முடியாது.. ராணாவை ஆஸி நொறுக்கிட்டாங்க.. பின்ச்
“எனவே எங்களுக்கு அவர் சவாலையும் கடினத்தையும் கொடுப்பார் என்பது எங்களுக்குத் தெரியும். 2வது போட்டியில் அவருடைய பந்து வீச்சை பார்த்து நானும் ஆச்சரியமடைந்தேன். ஏனெனில் அது போன்ற திறனை நான் டி20 கிரிக்கெட்டில் பார்த்ததில்லை. எனக்கும் அது புதிதாக இருந்தது. ஏனெனில் நான் டாமினேட் செய்ய விரும்பும் பேட்ஸ்மேன். எனக்கு எதிராகவும் அவர் சிறப்பாக பந்து வீசினார். அவர் சரியாக திட்டமிட்டு அதை செயல்படுத்துகிறார் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்