இந்திய அணியின் நட்சத்திர இளம் துவக்க வீரரான அபிஷேக் ஷர்மா தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தனது மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தின் மூலம் பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ள அபிஷேக் ஷர்மா அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரிலும் இந்திய அணியின் துவக்க வீரராக விளையாட இருப்பது உறுதி.
ஒருநாள் போட்டிகளில் இடம் பிடிக்கப்போகும் அபிஷேக் சர்மா :
இந்நிலையில் தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்தும் அழைப்பு வரலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் வெளியான அறிவிப்பின்படி :
போட்டியின் துவக்கத்திலேயே அதிரடியை காண்பிக்கும் அபிஷேக் ஷர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் இணையலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் எதிர்வரும் இந்த ஆஸ்திரேலியா தொடரானது அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள வேளையில் அந்த தொடருக்கான இந்திய ஒருநாள் அணியின் பரிசீலனையில் அபிஷேக் ஷர்மாவின் பெயரும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணி அடுத்த மாதம் துவக்கத்தில் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.
அந்த தொடருக்கான டி20 இந்திய அணியில் இடம் பிடிக்கப்போகும் அபிஷேக் ஷர்மாவுக்கு கூடுதலாக ஒருநாள் போட்டிகளிலும் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்திய ஒருநாள் அணியின் துவக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இருக்கும் வேளையில் கூடுதல் துவக்க வீரராக அபிஷேக் ஷர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : ஜஸ்ப்ரீத் பும்ரா வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? – வெளியான முக்கிய அப்டேட்
அப்படி அபிஷேக் சர்மா இந்திய ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டால் அது தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் ரோகித் சர்மாவிற்கு எச்சரிக்கையாகவும் மாறும் என்பதும் சிலரது கருத்தாகவும் உள்ளது.



