ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோற்றது. இருப்பினும் 2வது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 1* (5) என்ற கணக்கில் பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்துள்ளது. ஜூலை 7ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 235 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதிகபட்சமாக அபிஷேக் சர்மா சதமடித்து 100, ருதுராஜ் கெய்க்வாட் 77*, ரிங்கு சிங் 48* ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே தடுமாற்றமாக பேட்டிங் செய்து 18.4 ஓவரில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக வேஸ்லி 43, லுக் ஜோங்வே 33 ரன்கள் சார்பில் அதிகபட்சமாக ஆவேஸ் கான், முகேஷ் குமார் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
உலக சாதனை:
இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி சதமடித்து முக்கிய பங்காற்றிய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். கடந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் அடித்து நொறுக்கிய அவர் இத்தொடரின் முதல் போட்டியில் அறிமுகமாகி டக் அவுட்டானார். ஆனால் அதற்கும் சேர்த்து இப்போட்டியில் ஜிம்பாப்வே பவுலர்களை அடித்து நொறுக்கிய அவர் 82 ரன்களில் இருந்த போது 6, 6, 6 என அடுத்தடுத்த ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு சதத்தை தொட்டார்.
இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்தடுத்த 3 சிக்ஸர்களை பறக்க விட்டு சதத்தை அடித்த முதல் வீரர் என்று தனித்துவமான உலக சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன் சேவாக் உட்பட பல வீரர்கள் சிக்ஸர் அல்லது 2 அடுத்தடுத்த சிக்ஸர்களை அடித்து சதத்தை தொட்டுள்ளனர். ஆனால் அபிஷேக் சர்மா தான் முதல் முறையாக 3 சிக்ஸர்களை அடித்து சதத்தை தொட்டுள்ளார்.
அத்துடன் ஐபிஎல் 2024 தொடரில் 42 சிக்ஸர்கள் அடித்த அபிஷேக் ஷர்மா இப்போட்டியில் 8 சிக்ஸர்கள் அடித்தார். அந்த வகையில் இந்த வருடம் மட்டும் அவர் டி20 கிரிக்கெட்டில் 50 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக 2024ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: டிஎன்பிஎல் 2024 : வெறும் 1 ரன் த்ரில்லர்.. ஷாருக்கான் மேஜிக்.. கடைசி பந்தில் திருப்பூரின் வெற்றியை பறித்த கோவை
இதற்கு முன் ரோகித் சர்மா இந்த வருடம் 46 சிக்சர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது போக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சதமடித்த முதல் இந்திய வீரர் மற்றும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் ஆகிய இரட்டை சாதனையையும் அபிஷேக் சர்மா படைத்துள்ளார்.



