
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய எட்டு நாடுகள் பங்கேற்று விளையாடும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் ஒன்பதாம் தேதி துவங்கிய இந்த தொடரானது செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 8 அணிகளில் எந்த அணி இறுதிவரை சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது செப்டம்பர் 10-ஆம் தேதி தங்களது முதலாவது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியுடன் இந்த தொடரை அமர்க்களமாக துவங்கியுள்ளது.
அதற்கடுத்து இந்திய அணி தங்களது இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து செப்டம்பர் 14-ஆம் தேதி துபாய் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்றுள்ள இந்திய அணியானது மிகவும் வலுவான அணி என்றும் எந்த ஒரு அணியாலும் இந்திய அணியை வீழ்த்த முடியாது என இந்திய அணியின் முன்னாள் துணைப் பயிற்சியாளரான அபிஷேக் நாயர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணிக்கு எதிராக இடம்பெற்றிருக்கும் எந்த ஒரு அணியையும் நான் சரியான போட்டியாளராக கருத மாட்டேன்.
ஏனெனில் ஏற்கனவே டி20 சாம்பியனாக இருக்கும் இந்திய அணி தற்போது விளையாடி வரும் விதத்தை பார்க்கும் போது எந்த ஒரு தொடரையும் இழக்காது என்று நினைக்கிறேன். இந்த தொடரில் ஒருவேளை இந்திய அணி தோல்வியை சந்தித்தால் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று மட்டுமே அர்த்தம். மற்றவகையில் இந்த தொடரை இந்திய அணி இழக்க வாய்ப்பே கிடையாது. தற்போது உள்ள டி20 அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டிக்கு முன்னர் தனது மகனை வாழ்த்திய அபிஷேக் சர்மாவின் தந்தை – விவரம் இதோ
அதேபோன்று வேகப்பந்து வீச்சாளர்களும் தங்களது பணியை மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர். இந்த தொடரிலும் இந்திய அணி மிக எளிதாக மற்ற அணிகளை வீழ்த்தி ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்று அபிஷேக் நாயர் கூறியது குறிப்பிடத்தக்கது.