ஆஸ்திரேலிய கிரிக்கெட் எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. 3 போட்டிகளின் முடிவில் சமநிலையில் இருந்த அத்தொடரின் 4வது போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நவம்பர் 6ஆம் தேதி கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 168 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
இந்தியாவுக்கு அதிகபட்சமாக சுப்மன் கில் 46, அபிஷேக் ஷர்மா 28, சிவம் துபே 22, அக்சர் பட்டேல் 21*, கேப்டன் சூரியகுமார் 20 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியாவை சிறப்பாக பவுலிங் செய்த இந்தியா வெறும் 119 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக கேப்டன் மார்ஷ் 30 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3, அக்சர் பட்டேல் 2, சிவம் துபே 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
பாண்டியாவின் இடத்தில்:
அதனால் 2 – 1* (5) என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் அத்தொடரின் கடைசிப் போட்டி நவம்பர் 9ஆம் தேதி கான்பெராவில் நடைபெறுகிறது. இந்நிலையில் இத்தொடரில் காயத்தால் வெளியேறிய ஹர்திக் பாண்டியாவின் இடத்தை சிவம் துபே சத்தமின்றி நிரப்பியுள்ளதாக முன்னாள் இந்திய வீரர் மற்றும் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பாராட்டியுள்ளார்.
4வது போட்டியில் 3வது இடத்தில் விளையாடிய துபே 22 (18) ரன்கள் அடித்ததுடன் பந்து வீச்சில் டிம் டேவிட், கேப்டன் மார்ஷ் ஆகியோரின் 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். எனவே ஆல் ரவுண்டர் என்று சொல்ல துபே இதற்கு மேல் எதுவும் செய்ய வேண்டியதில்லை என்று அபிஷேக் நாயர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
அசத்தும் சிவம் துபே:
“இந்தியாவுக்கு ஹர்திக் பாண்டியா போன்ற ஆல் ரவுண்டர் தேவை என்று நாம் எப்போதும் சொல்கிறோம். ஆனால் ஒவ்வொரு போட்டிக்குப் பின்பும் சிவம் துபே என்னால் ஆல் ரவுண்டராக இருக்க முடியும் என்பதைக் காண்பித்து வருகிறார். முக்கிய ஓவர்களை வீசி முக்கியமான விக்கெட்டுகளை எடுக்கும் அவர் பேட்டிங்கில் பல்வேறு சூழ்நிலைகளில் பங்காற்றுகிறார்”
இதையும் படிங்க: இவ்ளோ டேலன்ட் இருந்தும் இந்திய டி20 அணியில் ருதுராஜ் கெய்க்வாட்க்கு இடம் கிடைக்காதது ஏன்? – அஷ்வின் விளக்கம்
“அதனால் ஹர்திக் பாண்டியா இல்லாததை நீங்கள் மிஸ் செய்யவில்லை. 4வது போட்டியில் மீண்டும் துபே முக்கிய ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா அடித்து நொறுக்க முயற்சித்த போது அவர் 2 மிகப்பெரிய விக்கெட்டுகளை எடுத்தார். தற்போதைய இந்திய அணி நிர்வாகம் சவால் விடுக்கும் போதெல்லாம் அவர் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆல் ரவுண்டர் என்ற குறிச்சொல் வேண்டுமானால் துபேவுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஆல் ரவுண்டராக அவர் இந்தியாவுக்கு தேவையான அனைத்தையும் செய்கிறார்” என்று கூறினார்.



