ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 1 – 1* என்ற கணக்கில் சம நிலையில் இருக்கும் அந்தத் தொடரின் நான்காவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து முதல் நாள் முடிவில் 311-6 ரன்கள் எடுத்துள்ளது.
சாம் கோன்ஸ்டஸ் 60, உஸ்மான் கவாஜா 57, லபுஸ்ஷேன் 72 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்த அந்த அணிக்கு களத்தில் ஸ்டீவ் ஸ்மித் 68*, கமின்ஸ் 8* ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியாவுக்கு இதுவரை அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா தலா 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். முன்னதாக இந்தத் போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஓப்பனிங்கில் ரோஹித்:
அவருக்கு பதிலாக சுப்மன் கில் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக அரை சதம் கூட அடிக்காமல் தடுமாறும் அவர் இத்தொடரிலும் பெரிய ரன்கள் கொடுக்கவில்லை. அதனாலேயே அவர் நீக்கப்பட்டிருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் இந்தப் போட்டிக்கு தேவையான பிளேயிங் லெவனில் சுப்மன் கில் இடம் பெறவில்லையே தவிர நீக்கப்படவில்லை என்று துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் துவக்க வீரராக களம் இறங்குவார் என்றும் அபிஷேக் நாயர் அறிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பிட்ச்சை பார்க்கும் போது ரவீந்திர ஜடேஜாவுடன் வாஷிங்டன் சுந்தர் எங்களுக்கு திடமான பங்களிப்பை கொடுப்பார் என்று நாங்கள் கருதுகிறோம். சுப்மன் கில்லுக்காக நான் வருந்துகிறேன்”
இந்தியா அசத்துமா:
“அவர் அணியில் இருந்து நீக்கப்படவில்லை. அணிக்கு தேவைப்படும் கலவையில் அவரால் தனது இடத்தை கண்டறிய முடியவில்லை. அதை அவரும் புரிந்து கொண்டார். ரோகித் சர்மா மீண்டும் டாப் ஆர்டருக்கு வருகிறார். அவர் இந்தப் போட்டியில் கிட்டத்தட்ட ஓப்பனிங் இடத்தில் எங்களுக்காக விளையாட வாய்ப்புள்ளது” என்று கூறினார்.
இதையும் படிங்க: சேவாக்கை பார்த்த மாதிரியே இருந்துச்சி.. காரணத்துடன் சாம் கோன்ஸ்டாஸை பாராட்டிய – ஜஸ்டின் லாங்கர்
இதிலிருந்து இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்தியாவுக்காக துவக்க வீரர்களாக விளையாடுவார்கள் என்று நம்பப்படுகிறது. அதன் காரணமாக கேஎல் ராகுல் மூன்றாவது இடத்தில் கில்லுக்கு பதிலாக விளையாடுவார் என்றே சொல்லலாம். அதற்கு முன்பாக இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை விரைவாக இந்தியா அவுட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.