
இந்திய கிரிக்கெட் அணி 2012 முதல் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டது. அந்த உலக சாதனை வெற்றி நடை கடந்த வருடம் 0 – 3 (3) என்ற கணக்கில் நியூசிலாந்திடம் சந்தித்த ஒயிட்வாஸ் தோல்வியுடன் நிறைவுக்கு வந்தது. அந்த தோல்வியுடன் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்களும் ஓய்வு பெற்றனர்.
அதனால் மீண்டும் அசத்தத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி தற்போது தென்னாபிரிக்காவிடம் 25 வருடங்கள் கழித்து 0 – 2 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்துள்ளது. அந்த தோல்விகளுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் சுழல் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடியது முக்கிய காரணமானது. ஒரு காலத்தில் உலகிலேயே இந்தியா ஸ்பின் பவுலர்களை எதிர்கொள்வதில் கில்லாடியாக திகழ்ந்தது.
ஆனால் தற்போது அந்தக் கலையை இந்திய பேட்ஸ்மேன்கள் டி20 கிரிக்கெட்டின் வருகையால் மறந்து விட்டதாக நிறைய முன்னாள் வீரர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் சுழல் பந்துகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை இந்திய வீரர்கள் மறந்து விடவில்லை என்று தெனாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். மனம் தளராமல் நம்பிக்கையுடன் பயிற்சி எடுத்தாலே அதை சரி செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அடுத்தடுத்த தோல்விகளால் இந்தியா முடிந்து போகாமல் கம்பேக் கொடுப்பதற்கு தேவையானத் திறமையைக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஏபி பேசியது பின்வருமாறு. “தற்போதைய தோல்விகளின் வலி பற்றி எனக்குத் தெரியும் ஆனால் 3 விதமான கிரிக்கெட்டிலும் கொண்டிருக்கும் அமைப்புகளின் அடிப்படையில் இந்தியா இதைப்பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை”
“சமீபத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதால் அவர்களால் தற்காலிகமாக தங்களது அடையாளத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. களத்தில் அவர்களிடம் நல்ல போராட்டம் இருந்ததால் இந்தத் தோல்விக்காக பதற்றப்பட வேண்டியதில்லை. அவர்களிடம் முன்னோக்கிச் செல்வதற்குத் தேவையான நிறைய திறமை, ஆப்ஷன்கள் இருக்கிறது”
“அடுத்ததாக அவர்கள் ஒருநாள், டி20 புத்துணர்ச்சியுடன் வருவார்கள் என்பது தென்னாப்பிரிக்காவுக்கு கடினமாக இருக்கும். இந்தத் தோல்வி நீண்ட காலம் வலியைக் கொடுக்கும். ஆனால் அது சாலையின் முடிவு என்று அர்த்தமல்ல. இந்திய கிரிக்கெட்டில் நிறைய திறமையிருக்கிறது. சுழலுக்கு எதிராக சிறந்தவர்களான இந்திய வீரர்களிடம் டெக்னிக்கல் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை”
இதையும் படிங்க: அவரை கொண்டு வந்து அஸ்வினை வீட்டுக்கு அனுப்பியதே கம்பீர் தான்.. விராட், ரோஹித்தையும் முடிச்சாரு.. திவாரி
“தோல்வியால் உடனே அவர்கள் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து திறமையைக் காட்ட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் எதையும் அதிகம் மாற்ற வேண்டியதில்லை. இவை அனைத்தும் நம்பிக்கை, தன்னம்பிக்கை மற்றும் மனதளவிலான அணுகுமுறை ஆகியவற்றைப் பற்றியது” என்று கூறினார்.