
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இத்தனைக்கும் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ரோஹித் சர்மா 2027 உலகக்கோப்பை வரை கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அப்போது 40 வயதில் அவரால் அசத்த முடியுமா என்று சந்தேகிக்கும் தேர்வுக்குழு இப்போதே கில் தலைமையிலான புதிய அணியை கட்டமைக்கத் துவங்கியுள்ளது.
அதன் காரணமாக 2027 உலகக்கோப்பையில் விராட், ரோஹித் விளையாடுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. சொல்லப்போனால் அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலிய தொடருடன் அவர்கள் ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. இந்நிலையில் 2027 உலகக் கோப்பையில் விராட், ரோஹித் விளையாடுவதற்கான கேரண்டி இல்லை என்று முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
இருப்பினும் சுப்மன் கில் சிறந்த கேப்டனாக வளர அவர்கள் தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து உதவுவார்கள் என்றும் டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி தம்முடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ள விராட், ரோஹித் ஆகியோர் மற்றொரு உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாட ஊசலாடுவதைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது”
“அது நடக்குமா என்பது எனக்குத் தெரியாது. அதற்கு தேவையான கிரிக்கெட்டை அவர்கள் விளையாடுகிறார்களா? என்பது போன்ற விஷயங்கள் கேள்விக்குறியாகும். 2027க்கு செல்ல இன்னும் நிறைய தூரம் இருக்கிறது. அதைப் பிடிப்பதற்கு நிறைய கிரிக்கெட்டை விளையாடி ஃபார்மை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் போதுமான ரன்களை அடிக்க வேண்டும் என்பதே தேர்வாளர்கள் அவர்களுக்கு கொடுத்த செய்தியாக இருக்கும்”
“விராட், ரோஹித் போன்ற ஜாம்பவான்களை என்னுடைய அணியில் எதையும் பார்க்காமல் நான் தேர்ந்தெடுப்பேன். ஆனால் தற்போதைய இந்திய அணியில் தரத்தில் நிறைய போட்டி நிலவுகிறது. எனவே நாமும் ரன்கள் அடிக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களை அணியில் கொண்டிருப்பது உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு நல்ல சொத்தாகவும் இருக்கும். ஆனால் ரன்கள் அடிப்பதே முக்கியம்”
இதையும் படிங்க: சுப்மன் கில்லுக்கு அந்த பொறுப்பினை வழங்கியது சரிதான்.. ஆதரவு குரல் கொடுத்த – ஆரோன் பின்ச்
“அவர்கள் நிறைய இளம் வீரர்களை வழி நடத்தி சுப்மன் கில் நல்ல கேப்டனாக வர உதவுவார்கள். ஆனால் அவர்கள் உலகக்கோப்பையில் விளையாடுவார்களா என்று என்னால் கேரண்டியாக சொல்ல முடியாது. அதனாலேயே கில் ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கலாம். அதே சமயம் விராட், ரோகித் இப்போதும் அணியில் இருப்பது நல்ல முடிவு. அவர்களிடமிருந்து கில் மற்றும் இந்திய வீரர்கள் நிறைய கற்றுக் கொள்வார்கள்” என்று கூறினார்.