வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான அணி இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்தத் தொடரில் ஆரம்பம் முதலே தோல்வியை சந்திக்காமல் அசத்திய இந்தியா இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.
அந்த வெற்றிக்கு கேப்டன் ரோகித் சர்மா முதல் பும்ரா வரை அனைவருமே முக்கிய பங்காற்றினர். ஆனால் ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியா பங்காற்றிய விதம் மறக்க முடியாததாக அமைந்தது. ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் காயத்தை சந்தித்து வெளியேறிய அவர் பணத்துக்காக ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடுவார் என்ற விமர்சனங்களை சந்தித்தார்.
ஏபிடி பாராட்டு:
அதை விட 2024 ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக கேப்டனாக நியமிக்கப்பட்டதால் மும்பை ரசிகர்களே அவரை கடுமையாக கிண்டலடித்து விமர்சித்தனர். சொல்லப்போனால் ரோஹித் நீக்கப்பட்டதால் அவருடைய தலைமையில் மும்பை வெற்றி பெறக்கூடாது என அந்த அணி ரசிகர்களே வேண்டிக் கொண்டார்கள் என்று சொல்லலாம். ஆனால் கடைசியில் 2024 டி20 உலகக் கோப்பையில் 11 விக்கெட்டுகள் மற்றும் 114 ரன்கள் அடித்த பாண்டியா வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
மேலும் ஃபைனல் வெற்றியால் கண்ணீர் விட்ட அவர் தாம் பணத்துக்காக மட்டும் விளையாடுபவன் அல்ல என்பதை நிரூபித்து உலகின் நம்பர் ஒன் டி20 ஆல்ரவுண்டராக முன்னேறி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் வெற்றி பெறக்கூடாது என்று நினைத்த மும்பை ரசிகர்கள் மனதிலும் ஃபைனலில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அசத்தக்கூடாது என்று நினைத்த தம்முடைய மனதிலும் ஹர்திக் பாண்டியா இடம் பிடித்துள்ளதாக ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார்.
இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “குஜராத் அணியிலிருந்து மும்பை அணிக்கு நகர்ந்த பின் ஹர்திக் பாண்டியா மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்தார். அவற்றை தாங்கிக் கொண்ட அவர் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் தம்முடைய கேப்டனிடம் இருந்து பந்தை பெற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இது போன்ற பெரிய தருணங்களே தனித்து நிற்கின்றன”
இதையும் படிங்க: பந்தை ரெண்டு பக்கமும் ஸ்விங் செய்றாரு.. அவரை டெஸ்ட் அணியிலும் சேருங்க.. இந்திய வீரருக்கு – வாசிம் அக்ரம் ஆதரவு
“அது ஒரு வீரராக நான் இதைத்தான் செய்கிறேன் என்று இந்திய ரசிகர்களுக்கு அவர் கூறிய தருணம். அவர் அங்கிருந்த அனைத்து இந்தியர்களையும் பெருமடைய வைத்தார். சொல்லப்போனால் நானும் அங்கே அவர் அப்படி அசத்தக்கூடாது என்று விரும்பினேன். ஆனால் அதை திரும்பிப் பார்க்கும் போது அவர் நிறைய மரியாதைக்குரியவர். அவரை சந்தேகப்பட்ட அனைத்து மும்பை ரசிகர்கள் மனதிலும் பாண்டியா தற்போது வருங்காலத்திற்காக இடத்தை பிடித்துள்ளார் என்று உறுதியாக சொல்வேன்” எனக் கூறினார்.



