இந்திய கிரிக்கெட்டில் 2 தூண்களாக செயல்பட்டு வந்த விராட் கோலி, ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். கடந்த பல வருடங்களாக இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றிய அவர்கள் சமீபத்திய நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் சுமாராக விளையாடினர். அவர்களுடைய சுமாரான ஆட்டத்தால் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
அதன் காரணமாக அடுத்து நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர்களை பிசிசிஐ கழற்றி விட முடிவெடுத்தது. அதற்கு முன்பாக அவர்களாகவே ஓய்வு பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நீண்ட வருடங்களாக இந்திய அணியின் மேட்ச் வின்னர்களாக விளையாடி வந்த அவர்கள் அடுத்தடுத்து ஓய்வு பெற்றது பெரும்பாலான இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ஆச்சர்யமான ஓய்வு:
இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றது தமக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்ததாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் கூறியுள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவில் தடுமாற்றமாக விளையாடிய அவர்கள் இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுத்து தங்களது தரத்தை நிரூபித்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்றும் பின்ச் கூறியுள்ளார். ஆனால் அதைச் செய்யாமலேயே அவர்கள் ஓய்வு பெற்றது தமக்கும் சோகத்தைக் கொடுத்துள்ளதாக அவர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது பற்றி பின்ச் பற்றி பேசியது பின்வருமாறு. “அவர்களுடைய முடிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி ஏமாற்றம் கிடைத்தது. அதனால் இங்கிலாந்து தொடரில் விராட் கோலி ஒரு முறை தன்னை முழுமையாக தள்ளி நினைவு கொள்ளக்கூடிய அளவுக்கு சிறப்பாக விளையாடி விடை பெறுவார் என்று நாம் அனைவரும் நினைத்தோம்”
பின்ச் சோகம்:
“அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஓய்வை அறிவித்தது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. ரோஹித் சர்மாவும் அதே போன்ற சூழ்நிலையைச் சந்தித்தார். இப்போதெல்லாம் ஓய்வு முடிவுகளை இன்ஸ்டாகிராம் அல்லது சமூக வலைதளங்களில் அறிவிப்பது வாடிக்கையாக மாறி விட்டது. இனிமேல் அந்த 2 வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடுவதை பார்க்க முடியாது என்பது எனக்கு சோகத்தை கொடுக்கிறது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: கனமழையால் ஆர்.சி.பி – கே.கே.ஆர் போட்டி ரத்தானால் என்ன நடக்கும்? – விவரம் இதோ
இதைத் தொடர்ந்து அந்த 2 ஜாம்பவான்களும் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாட உள்ளனர். அது போக இந்தியாவுக்காக அவர்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளனர். 2027 உலகக் கோப்பையே அவர்கள் இந்தியாவுக்காக விளையாடும் கடைசி தொடராக இருக்கும் என்று நம்பப்படுகிறது.



