ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா வென்றது. 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பின் சூரியகுமார் யாதவ் புதிய கேப்டனாக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் இதுவரை விளையாடிய அனைத்து டி20 தொடர்களிலும் இந்தியா தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது.
குறிப்பாக 2024இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரை 3 – 1 (4) என்ற கணக்கில் வென்ற இந்தியா தற்போது ஆஸ்திரேலிய தொடரையும் வென்றுள்ளது. அதற்கிடையே 2025 ஆசியக் கோப்பையையும் வென்ற இந்திய அணி தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து வருகிறது. அதனால் சொந்த மண்ணில் நடைபெறும் 2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு நல்ல வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம்.
அக்கறை இருந்தா:
ஆனால் அதற்கு இனிமேலாவது பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சோதனை என்ற பெயரில் தேவையற்ற மாற்றங்களை செய்வதை நிறுத்தி இந்திய அணியை குழப்பாமல் இருக்க வேண்டுமென முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேட்டுக் கொண்டுள்ளார். ஏனெனில் 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரராக சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங், ஓப்பனிங்கில் அபாரமாக விளையாடிய சஞ்சு சாம்சன் ஆகியோர் அவ்வப்போது பெஞ்சில் அமர வைக்கப்படுகிறார்கள்.
அதே போல ஹர்ஷித் ராணா போன்ற திறமையை நிரூபிக்காத வீரருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கின்றது. இது போக இசைநாற்காலி போல பேட்டிங் வரிசை தாறுமாறாக மாற்றப்படுகிறது. எனவே அவற்றை இந்திய அணி நிறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்ளும் ஆகாஷ் சோப்ரா இது பற்றி பேசியது பின்வருமாறு. “இனிமேல் சோதனைகள் நிற்கும் என்று நான் நம்புகிறேன்”
சோதனைகளை நிறுத்துங்க:
“நாங்கள் சோதனைக் காலங்களில் இருப்பதால் யாரை வேண்டுமானாலும் பேட்டிங்கில் மேலே கீழே அனுப்புவோம், பெஞ்சில் அமர வைப்போம் என்று அவர்கள் சொன்னார்கள். அப்படி நிர்வாகம் வெளிப்படையாக சொல்லும் போது நீங்களும் சோதனையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அடுத்ததாக தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா தலா 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது”
இதையும் படிங்க: கோலிக்கும் எனக்குமான வதந்தி சண்டையை தோனி முடிச்சாரு.. 2014இல் கோலிக்காக ரிட்டையரானாரு.. தவான் நெகிழ்ச்சி
“அதற்கு முன் நம்முடைய சோதனைகள் முடிந்தது என்று நினைக்கிறேன். இதன் பின்பும் நீங்கள் அதிகப்படியான சோதனைகளை செய்ய முடியாது. ஏனெனில் டி20 உலகக் கோப்பை வரும் பிப்ரவரியில் துவங்குகிறது. அது சொந்த மண்ணில் நடைபெறுவதால் உங்களுக்கு சாதகம் போல் தெரியும். ஆனால் சொந்த மண்ணில் உங்களுக்கு அழுத்தமும் கடினமும் இருக்கும். எனவே அனைத்து சோதனைகளும் நிறுத்தப்பட வேண்டும். இனிமேலாவது நெருக்கமான வீரர்களை தொடர்ச்சியாக பிளேயிங் லெவனில் விளையாட வையுங்கள்” என்று கூறினார்.



