ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற முடிந்த 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி ஒன்றுக்கு மூன்று (1-3) என்ற கணக்கை இழந்திருந்த வேளையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கும் செல்லும் வாய்ப்பையும் தவறவிட்டது. இதன் காரணமாக எதிர்வரும் டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாய் சுதர்ஷன் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் :
ஏனெனில் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்குள் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவிப்பார்கள் என்பதனால் தற்போது எதிர்கால டெஸ்ட் அணிக்கான மாற்று வீரர்களை தேர்வு செய்யும் முனைப்புடன் நிர்வாகம் சில நடவடிக்கைகளை எடுக்க காத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக வீரரான சாய் சுதர்சனை அணிக்குள் கொண்டுவர வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : எதிர்கால டெஸ்ட் அணியில் கே.எல் ராகுல் மூத்தவீரராக அணியில் இருப்பார்.
எனவே அவரை நாம் தொடர்ச்சியாக அணியில் வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று என்னை பொறுத்தவரை ஜெய்ஸ்வாலுடன் துவக்க வீரராக சாய் சுதர்சனை களமிறக்கலாம். ஏனெனில் அவர்கள் இருவரால் நல்ல துவக்கம் கிடைக்கும். அதோடு விராட் கோலி ஓய்வு பெற்றவுடன் சுப்மன் கில் நான்காவது இடத்திற்கு வரலாம்.
அதே போன்று ஜெய்ஸ்வாலையும் நான்காவது இடத்தில் நாம் விளையாட வைக்க முடியும். ஆனால் அவரது பார்ம் எப்படி இருக்கிறது என்பதை கணித்தே அந்த முடிவை எடுக்க வேண்டும். அதனை தொடர்ந்து ரிஷப் பண்ட் ஐந்தாவது இடத்தில் தொடர்வார். ரிஷப் பண்ட், சுப்மன் கில், ஜெய்ஸ்வால் ஆகிய மூவரும் பெரிய தூண்களாக இருப்பார்கள்.
இதையும் படிங்க : ரெடியா இருக்கேன்.. இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சம்மதம் சொன்ன பீட்டர்சன்.. பிசிசிஐ ஏற்குமா
அதே போன்று தமிழக வீரரான சாய் சுதர்சன் விளையாடி வரும் முறையை பார்க்கும் போது இந்திய அணியின் எதிர்கால சூப்பர் ஸ்டாராக அவர்தான் பேட்டிங் துறையில் இருப்பார் என்று கருதுகிறேன். என்னை பொறுத்தவரை அவருக்கு மூன்று வகையான போட்டிகளிலும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா தனது ஆதரவினை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.