தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது நாளை ஜூன் 20-ஆம் தேதி அந்நாட்டு அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்திய அணியின் அணித்தேர்வின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன.
எதுக்காக அவரை டீம்ல இருந்து தூக்குறீங்க : ஆகாஷ் சோப்ரா கேள்வி
ஏனெனில் திறமையான வீரர்கள் சிலருக்கு இந்த இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது பலரது மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சர்ஃபராஸ் கான் கடந்த ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 3 அரைசதம் என 371 ரன்கள் அடித்து அசத்தியும் அவருக்கு இந்த இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அதேவேளையில் இந்திய ஏ அணியில் இடம் பிடித்திருந்த அவர் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற பயிற்சி போட்டியில் 92 ரன்கள் குவித்து அசத்தினார். அதுமட்டுமின்றி முதன்மை இந்திய அணிக்கு எதிராக விளையாடிய பயிற்சி போட்டியிலும் 76 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இப்படி திறமையான வீரராக இருந்தும் அவருக்கு முதன்மை டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து சர்பராஸ் கானிற்கு ஆதரவாக பேசிய அவர் கூறுகையில் : சர்ஃபராஸ் கான் என்ன தவறு செய்தார்? எதற்காக அவரை அணியில் இருந்து நீக்குகிறார்கள் என்பது இன்றுவரை எனக்கு புரியவில்லை .ஏனெனில் அவர் தற்போது கூட இங்கிலாந்து நாட்டிற்கு சென்று இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 90 ரன்களையும், முதன்மை இந்திய அணிக்கு எதிராக ஒரு சதத்தையும் விளாசியுள்ளார்.
ஆனாலும் அவருக்கு முதன்மை அணியில் வாய்ப்பு இல்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை அவர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற போட்டிகளில் விளையாடி சொதப்பி இருந்தால் கூட அவரை நீக்குவதை ஏற்றுக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : 158/6 டூ 158க்கு அவுட்.. 5 பந்தில் 4 விக்கெட்ஸ்.. சூர்யா மாஸ் ஹாட்ரிக் சாதனை.. நெல்லையின் வெற்றியை பறித்த மதுரை
இப்படி எந்த தவறும் செய்யாமல் நல்ல பேட்டிங் டெக்னிக் உடன், நல்ல பார்முடன் இருக்கும் அவரை தொடர்ச்சியாக இந்திய அணி நீக்கி வருவது ஏமாற்றம் அளிக்கிறது. அவரைப் போன்ற திறமையான இளம் வீரர்களுக்கு இந்திய அணி நீண்ட ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என சர்பராஸ் கானுக்கு ஆதரவாக ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.



