இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருக்கிறார்கள். அவர்களின் சுமாரான ஆட்டத்தால் கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் தோற்ற இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது. அதன் காரணமாக கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர்கள் ஃபார்மை மீட்டெடுக்க ரஞ்சிக் கோப்பையில் விளையாடினார்கள்.
அதில் 2015க்குப்பின் ரஞ்சிக் கோப்பையில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக விளையாடிய ரோகித் சர்மா 50 ரன்கள் கூட தாண்டவில்லை. அதுவரை அசத்தி வந்த மும்பை அவர் வந்த நேரம் பார்த்து ஜம்மு காஷ்மீரிடம் 11 வருடங்கள் கழித்து தோற்றது. அடுத்ததாக மேகாலயா அணிக்கு எதிராக மும்பை தற்போது விளையாடும் போட்டியில் ரோஹித், ஜெய்ஸ்வால் ஆகியோர் விளையாடவில்லை.
உண்மையான அக்கறை இல்லை:
மறுபுறம் ரஞ்சிக் கோப்பை இரண்டாவது சுற்றின் முதல் பகுதியில் விளையாடாத விராட் கோலி ஜனவரி 30ஆம் தேதி ரயில்வேஸ் அணிக்கு எதிராக துவங்கிய போட்டியில் டெல்லிக்காக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் அனைத்து வீரர்களும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவது கட்டாயம் மீறினால் ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்படும் என்று பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.
அதற்கு பயந்து தான் விராட் கோலி, ரோஹித் சர்மா ரஞ்சிக் கோப்பையில் விளையாடுகிறார்களே தவிர உண்மையான அக்கறையுடன் விளையாடவில்லை என்று முன்னாள் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது பற்றி தெளிவான விளக்கத்துடன் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறார். அதற்கு முன்பாக அவர் அலிபாக் நகரில் சஞ்சய் பங்காருடன் சேர்ந்து பயிற்சிகளை எடுத்தார். அவுட் சைட் ஆஃப் பந்துகள், பேக்-புட் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக அவர் பயிற்சிகளை எடுத்தார்”
இது தண்டனை இல்லை:
“ரோஹித், ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோர் மேகாலயாவுக்கு எதிரான கட்டாயம் வென்றாக வேண்டிய போட்டியில் மும்பைக்காக விளையாடவில்லை. இதிலிருந்தே அனைவரும் இதை வெறும் ஒரு கடமையாக எடுத்துக் கொண்டுள்ளது தெரிகிறது. ஏனெனில் முதல் ரவுண்டு போட்டியில் விளையாடாத விராட் கோலி தற்போதைய போட்டியில் விளையாடுகிறார்”
இதையும் படிங்க: 15784 ரசிகர்கள்.. 94 லட்சம்.. டெல்லியை திருவிழாவாக மாற்றி அன்பை காட்டிய கிங் கோலி.. 12 வருட கம்பேக் நிகழ்வுகள்
“இது உங்களுக்கு என்ன சொல்கிறது? எனக்கு இது தண்டனையை தவிர்ப்பதற்காக அவர்கள் விளையாடுகிறார்கள் என்பதைச் சொல்கிறது. உண்மையில் உள்ளூர் போட்டிகள் என்பது தண்டனை கிடையாது. இது மற்ற இளம் வீரர்கள் உங்களுடன் இணைந்து விளையாடுவதற்கும் நீங்கள் உங்களுடைய ஃபார்மை கண்டறிவதற்குமான வாய்ப்பை வழங்கும் பொன்னான இடமாகும்” என்று கூறினார்.



