ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்க உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் இந்தியா முதல் முறையாக வென்று சாதனை படைத்தது. அந்த வரிசையில் சமீபத்தில் நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்ததால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல ஆஸ்திரேலிய தொடரை இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாட உள்ளது.
முன்னதாக இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து ஊடகங்களும் தொலைக்காட்சி நிறுவனங்களும் விராட் கோலியை விளம்பரங்களில் முன்னிலைப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கேப்டன் ஆஸ்திரேலிய பட் கமின்ஸ் அருகே இந்திய கேப்டன் ரோகித் சர்மா இருக்க வேண்டிய இடத்தில் விராட் கோலி இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் கிங் கோலி:
அதற்கான காரணம் பற்றி முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நீங்கள் மரியாதை பெற வேண்டுமெனில் அதற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்த வேண்டும். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அங்கே நீங்கள் எவ்வளவு அசத்தினாலும் மரியாதை பெற மாட்டீர்கள்”
“ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் அவர்களுக்கு எதிராக பேட்டிங் அல்லது பந்து வீச்சில் அசத்தினால் அவர்கள் உங்களை நினைவில் வைத்திருப்பார்கள். நீங்கள் அவர்களுடைய வரலாற்றில் எழுதப்படுவீர்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் ரோகர் சர்மா மகத்தானவர் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் அவர் இதுவரை ஒரு முறை கூட ஆஸ்திரேலியாவில் முழுமையாக டெஸ்ட் தொடரில் விளையாடியதில்லை”
சச்சினுக்கு நிகராக:
“அதனால் அவர் அங்கே அந்தஸ்தை பெறாமல் இருக்கலாம். ஆஸ்திரேலியாவில் நீங்கள் அசத்தினால் அங்குள்ளவர்கள் தான் முதலில் உங்களுக்கு எழுந்து நின்று பாராட்டுவார்கள். சொல்லப்போனால் அவர்கள் உங்களுக்கு தலை வணங்குவார்கள். அதை சச்சின் டெண்டுல்கருக்கு அவர்கள் கொடுத்து பார்த்துள்ளோம். எனவே ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் நீங்கள் மரியாதை பெற வேண்டுமெனில் அங்கே அசத்த வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: இந்தியா 339/8.. ராகுல் காயம், கோலி சொதப்பல்.. கில், ஜெய்ஸ்வால் அசத்தல்.. பயிற்சி போட்டி ரிப்போர்ட்
அவர் கூறுவது போல விராட் கோலி ஆஸ்திரேலிய மண்ணில் 25 போட்டிகளில் 1352 ரன்களை 54.08 என்ற அபார சராசரியில் 6 சதங்கள் உட்பட எடுத்துள்ளார். அதை விட அவருடைய தலைமையில் தான் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா தொடரை வென்று சாதனை படைத்தது. அதனாலேயே எதிரணியாக இருந்தாலும் விராட் கோலியை கிங் என்று ஆஸ்திரேலியர்கள் பாராட்டுவது வழக்கமாகும்.



