
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வந்ததும் சில அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்தது. குறிப்பாக ரோகித் சர்மா ஓய்வுக்கு பின் ஹர்திக் பாண்டியா புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாண்டியா ஃபிட்டாக இல்லையென்று சொல்லி கழற்றி விட்ட கம்பீர் புதிய டி20 கேப்டனாக சூரியகுமாரை தேர்ந்தெடுத்தார்.
அதே போல சுப்மன் கில்லை ஆல் ஃபார்மட் பிளேயராக பார்ப்பதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்தார். எனவே அவரை வருங்கால கேப்டனாக வளர்ப்பதற்காக தற்போது துணை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அகர்கர் கூறியிருந்தார். அந்த சூழ்நிலையில் தாமும் இந்தியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டில் விளையாட விரும்புவதாக நேற்று முன்தினம் சூரியகுமார் கூறினார்.
ஆசை பலிக்காது:
அதற்காக மும்பையில் நடைபெறும் புஜ்ஜி பாபு உள்ளூர் தொடரில் விளையாட உள்ளதாகவும் சூரியகுமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சூரியகுமார் விரும்பினாலும் இனிமேல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட முடியாது என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஏனெனில் ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் போதுமான வாய்ப்பில் சொதப்பிய சூரியகுமார் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலும் அசத்தவில்லை.
அத்துடன் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு ரிசப் பண்ட், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் இருப்பதால் சூரியகுமாரை வெறும் டி20 பிளேயராக மட்டும் பார்ப்பதாக அஜித் அகர்கர் வெளிப்படையாக கூறினார். எனவே சூரியகுமாருக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“சூரியகுமாருக்கு குறுகிய வருங்காலத்தில் அந்த வாய்ப்பு கிடைக்காது. ஏனெனில் தேர்வுக் குழுவினர் மற்றும் அணி நிர்வாகம் ஏற்கனவே முடிவெடுத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். குறிப்பாக தேர்வுக் குழுவினர் சூரியகுமாரை டி20 ஸ்பெசலிஸ்ட் வீரராக மட்டுமே கருதுகின்றனர். எனவே அவரை மற்ற அணிகளில் தேர்ந்தெடுக்க தேர்வாளர்கள் விரும்பவில்லை. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு வாய்ப்பில்லை என்பதை அர்த்தம்”
இதையும் படிங்க: விராட், ரோஹித்தை விட முக்கியமான.. ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு 2 தொடரில் ஓய்வு சலுகையை வாரி வழங்கிய பிசிசிஐ
“அத்துடன் டெஸ்ட் அணியில் வருவதற்கு நிறைய வீரர்கள் போட்டியில் உள்ளனர். அதனால் அடுத்ததாக நடைபெறும் வங்கதேச டெஸ்ட் தொடரில் சூரியகுமார் விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை. அதே போல ஒருநாள் அணியிலும் அவருக்கு தற்போது வாய்ப்பு கிடைப்பது கடினம்” என்று கூறினார். அவர் கூறுவது போல சமீபத்திய இலங்கை டி20 தொடரில் கேப்டனாக விளையாடிய சூரியகுமார் அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் கழற்றி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.