
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் அத்தொடரின் கடைசி போட்டி ஜூலை 31ஆம் தேதி ஓவலில் துவங்கியது. அந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலையில் இந்தியா களமிறங்கியது.
அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா மிகவும் சுமாராக பேட்டிங் செய்து வெறும் 224 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கருண் நாயர் 52, சாய் சுதர்சன் 38 ரன்கள் நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
முன்னதாக இத்தொடரில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 700க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். அப்படிப்பட்ட அவர் இந்தப் போட்டியில் 21 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தைப் பெற்ற போதிலும் ரன் அவுட்டானார். குறிப்பாக அருகிலேயே அடித்த அவர் வேகமான சிங்கிள் எடுப்பதற்காக பாதி தூரம் ஓடினார்.
மறுபுறம் பவுலர் பந்தை எடுத்ததைப் பார்த்த சுதர்சன் அதை ஏற்று ஓடவில்லை. அதனால் கில் மீண்டும் வெள்ளைக்கோட்டை தொடுவதற்குள் பவுலர் ஸ்டம்ப் மேலே அடித்து ரன் அவுட்டாக்கினார். ஒருவேளை அவர் அப்படி தம்முடைய விக்கெட்டை பரிசாக கொடுக்காமல் அரை சதம் அடித்திருந்தால் கூட இந்தியா 250 – 300 ரன்கள் அடித்திருக்கும் என்றே சொல்லலாம். இந்நிலையில் சுப்மன் கில் ரன் அவுட்டானது தற்கொலை போன்றது என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒருவேளை இப்போட்டியில் தோற்றால் கில் ரன் அவுட் முக்கிய காரணமானதாக இந்திய ரசிகர்கள் சொல்லி வருந்துவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் ரன் அவுட் முக்கியமானது. அது அவருடைய சொந்த தவறு. பந்தை தடுத்ததும் அவர் ரன் எடுக்க ஓடியது கிட்டத்தட்ட தற்கொலை போன்றது. ஒருவேளை சுதர்சன் ஓடியிருந்தால் அவரும் அவுட்டாகியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை”
இதையும் படிங்க: ஓவல் டெஸ்ட் : விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய புதிய கேப்டன் சுப்மன் கில் – விவரம் இதோ
“ஆனால் கில் அந்த தவறை செய்ததால் அவரே அவுட்டானார். நல்ல ஃபார்மில் இருக்கும் நீங்கள் உங்களுடைய விக்கெட்டை இப்படி பரிசளித்துள்ளீர்கள். ஒருவேளை இந்தப் போட்டியில் இந்தியா எதிர்பார்த்தது போல் விஷயங்கள் நடக்காமல் போனால், நம்முடைய அணி உங்களுடைய அந்த ரன் அவுட்டை திரும்பிப் பார்த்து வருத்தப்படுவார்கள்” என்று கூறினார்.