ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தடுமாறி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் ரோஹித் சர்மா தலைமையில் களம் இறங்கிய அடுத்த 2 போட்டிகளில் இந்தியா மிகவும் திணறலாக விளையாடிய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
அந்த தடுமாற்றத்திற்கு இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் சுமாராக விளையாடுவது முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக இந்திய கிரிக்கெட்டின் பிரின்ஸ் என்று சிலரால் வர்ணிக்கப்படும் சுப்மன் கில் காபா மைதானத்தில் 2021ஆம் ஆண்டு 91 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பாராட்டினார். ஆனால் இம்முறை 1 (3) ரன்னில் அவுட்டான அவர் தொடர்ந்து வெளிநாட்டில் தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறார்.
சுப்மன் கில் ஏமாற்றம்:
இந்நிலையில் புஜாராவை கழற்றி விட்டு 3வது இடத்தில் விளையாடும் சுப்மன் கில் ஆசிய கண்டத்துக்கு வெளியே தொடர்ந்து தடுமாறி வருவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். முக்கியமான மூன்றாவது இடத்தில் கில் இப்படி விளையாடினால் இந்தியா எப்படி வெல்லும் என்றும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“நாம் சுப்மன் கில் பற்றியும் பேச வேண்டும். ஏனெனில் கடந்த 16 இன்னிங்ஸில் அவர் ஆசிய கண்டத்திற்கு வெளியே 40 ரன்களை கூட தாண்டவில்லை. இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே நீங்கள் ஒற்றை இலக்க ரன்களில் பலமுறை அவுட்டானீர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது இடத்தில் இப்படி நீங்கள் பேட்டிங் செய்தால் அது இந்தியாவுக்கு பிரச்சனை”
இந்தியா தப்புமா:
“கடந்த போட்டியில் அவர் நன்றாக தெரிந்தார். ஆனால் அவரிடம் மட்டும் பிரச்சனை இல்லை. நம்முடைய மொத்த பேட்டிங் துறையின் ஸ்டைலும் இப்படித்தான் இருக்கிறது. ஜெய்ஸ்வால் முதல் பந்தையே கடினமாக டிரைவ் அடிக்க முயற்சித்தார். அங்கே ஃபீல்டர் இருந்ததால் அவருக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இல்லை. ஆனால் சுப்மன் கில் அதிரடியான டிரைவ் அடிக்க முயற்சித்தார்”
இதையும் படிங்க: தமிழகத்தின் முரளி விஜய் மாதிரி ராகுல் இதை செய்றாரு.. மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் கத்துக்கணும்.. கவாஸ்கர் அட்வைஸ்
“அது பவுண்டரியாக செல்லும் போது நன்றாக தெரியும். ஆனால் அப்படி விளையாடுவதால் உங்களுடைய விக்கெட் விழுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. அந்த வகையில் நீங்கள் உங்களுடைய கையில் இருந்து விக்கெட்டை தூக்கி எறிகிறீர்கள். அதை நிறுத்துவதற்கும் நீங்கள் விரும்புவதில்லை” என்று கூறினார். இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருவது குறிப்பிடத்தக்கது.



