
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் சஞ்சு சாம்சன், கருண் நாயர், முகமது சிராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்படாதது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் சிராஜ் தேர்ந்தெடுக்கப்படாததற்கு சில முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இந்திய அணி தங்களுடைய போட்டிகளை விளையாட உள்ள துபாயில் ஸ்பின்னர்களுக்கு அதிக உதவி கிடைக்காது என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அக்சர் படேல் – ரவீந்திர ஜடேஜா ஆகிய 2 இடது கை ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது சரியானதல்ல என்றும் அவர் கூறியுள்ளார். அதனால் எப்படியும் அவர்களில் ஒருவர் பெஞ்சில் அமர்ந்தாக வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
மறுபுறம் ஷமி, பும்ரா ஆகிய இருவருமே தற்சமயத்தில் காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார்கள். எனவே அவர்களுக்கு ஆதரவாக ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய கருத்துப்படி முகமது சிராஜ் இந்திய அணியில் இருக்க வேண்டும்”
“அவர் யாருடைய இடத்தில் இருக்க வேண்டும் என்பதையும் நான் சொல்வேன். தற்போதைய அணியில் இரண்டு இடது கை ஸ்பின்னர்கள், ஒரு ஆஃப் ஸ்பின்னர் இருக்கிறார்கள். அந்த மூவரில் ஒருவரை நீங்கள் நீக்கலாம். குறிப்பாக ரவீந்திர ஜடேஜாவை விட்டுவிட்டு முகமது சிராஜை அவருடைய இடத்தில் தேர்வு செய்திருக்கலாம். அதை நீங்கள் செய்திருக்க வேண்டும்”
“ஏனெனில் முகமது சிராஜ் அணிக்கு நிறைய மதிப்பை கொண்டு வருவார். ரவீந்திர ஜடேஜா விளையாடுவதற்கு மிகவும் குறைவான வாய்ப்புகளே இருக்கிறது. நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் அவர் விளையாடுவதற்கு வாய்ப்பு இல்லை. அப்படி ஜடேஜா விளையாடவில்லை எனில் அவருக்கு பதிலாக அதிகமாக விளையாடக்கூடிய ஒருவரை நீங்கள் அணியில் வைத்திருக்கலாம்”
இதையும் படிங்க: இதுக்காக தான் கில்லை துணை கேப்டனா போட்ருக்காங்க.. கோலி, பும்ரா சப்போர்ட் பண்ணுவாங்க.. அஸ்வின் பேட்டி
“அந்த இடத்தில் சிராஜ் இருந்தால் அணிக்கு நிறைய பங்காற்றுவார்” என்று கூறினார். முன்னதாக முகமது சிராஜ் புதிய பந்தை தவிர்த்து மற்ற நேரங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்று ரோஹித் சர்மா கூறினார். அதனாலேயே அவரை தேர்ந்தெடுக்கவில்லை என்றும் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.