ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியிலிருந்து சுப்மன் கில் கடைசி நேரத்தில் கழற்றி விடப்பட்டார். ஏனெனில் கடைசியாக விளையாடிய 18 சர்வதேச டி20 போட்டிகளில் அரை சதம் கூட அடிக்காத அவர் நல்ல ஃபார்மில் இல்லை. எனவே துணைக் கேப்டனாக இருந்த போதிலும் அணியின் நலனைக் கொண்டு அவரை தேர்வுக்குழு கழற்றி விட்டுள்ளது.
அதன் காரணமாக அபிஷேக் சர்மாவுடன் ஓப்பனிங்கில் சஞ்சு சாம்சன் விளையாடுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சுப்மன் கில் – சஞ்சு சாம்சன் ஆகியோரை ஓப்பனிங் விளையாட வைக்கும் சண்டையில் தேர்வுக்குழு ஜெய்ஸ்வாலை மறந்து விட்டதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஆதங்கம் தெரிவித்துள்ளார். 2024 டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வான ஜெய்ஸ்வால் விளையாடும் வாய்ப்பு பெறவில்லை.
மறக்கப்பட்ட ஜெய்ஸ்வால்:
தற்போது 2026 டி20 உலகக் கோப்பையில் அவரை தேர்வுக் குழு சத்தமின்றி மொத்தமாக கழற்றி விட்டது பற்றி ஆகாஷ் பேசியது பின்வருமாறு. “ஜெய்ஸ்வால் விளையாடும் விதத்திற்கு உண்மையில் அவர் தான் அணியில் இருந்திருக்க வேண்டும். 2024 டி20 உலகக் கோப்பையில் இருந்த அவருக்கு தற்போது அணியில் இடமில்லை என்ற ஒரே காரணத்தால் வாய்ப்பு கிடைக்கவில்லை”
“இதற்கு முன் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் சதமடித்துள்ள அவர் 3 ஃபார்மெட்டிலும் சதமடித்த 6 இந்தியர்களில் ஒருவர். இருப்பினும் டி20 அணியில் விளையாடாத அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிறைய விளையாடியுள்ளார். இதற்கிடையே அபிஷேக், சாம்சன் நன்றாக விளையாடியதால் திடீரென அவருக்கு இடமில்லை. அதன் பின் கில்லை நோக்கி சென்ற இந்தியா துணைக் கேப்டனாகவும் நியமித்தது”
ஆகாஷ் சோப்ரா ஆதங்கம்:
“கடந்த ஆசியக் கோப்பையில் ஜெய்ஸ்வாலை நான் எனது அணியில் தேர்ந்தெடுத்திருந்தேன். அப்போது திடீரான கில் துணைக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதால் ஓப்பனிங்கில் விளையாட முதன்மை வீரராக காத்திருந்த ஜெய்ஸ்வால் மறக்க பட்டார். தற்போது கில் கழற்றி விடப்பட்டுள்ள நிலையில் ஓப்பனிங்கில் விளையாட சாம்சன் வந்துள்ளார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: சூரியகுமார் யாதவுக்கு அடுத்து இந்திய அணியின் புதிய டி20 கேப்டன் இவர்தான் – வேற வழியில்ல
அவர் கூறுவது போல ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான அரை சதமடித்த இந்திய வீரராக ஜெய்ஸ்வால் சாதனை படைத்துள்ளார். 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் காலிறுதியில் சதமடித்த அவர் ருதுராஜ் கைக்வாட் தலைமையில் இந்தியா தங்கப்பதக்கம் வெல்ல உதவினார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே அதிரடியாக விளையாடும் ஸ்டைலைக் கொண்டுள்ள அவருக்கு டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது ஏமாற்றத்துக்குரிய விஷயமாகும்.



