
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையில் இந்தியா வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றிக்கு ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டராக செயல்பட்டு முக்கிய பங்காற்றினார். அதற்கு முன்பாகவே 2024 டி20 உலகக் கோப்பையிலும் சிறந்த ஆல் ரவுண்டராக விளையாடிய அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டத்தை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
முன்னதாக 2022 ஐபிஎல் கோப்பையை குஜராத் அணியின் கேப்டனாக வென்ற காரணத்தால் ரோகித் சர்மா இல்லாத சமயங்களில் ஹர்தித் பாண்டியா இந்திய டி20 அணியை வழி நடத்தினார். அப்படியே ஐபிஎல் தொடரிலும் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். அதனால் ரோஹித் சர்மாவுக்கு பின் பாண்டியா தான் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசி நேரத்தில் புதிய பயிற்சியாளராக வந்த கௌதம் கம்பீர் ஃபிட்டாக இல்லையென்று சொல்லி பாண்டியாவை கழற்றி விட்டு சூரியகுமாரை புதிய கேப்டனாக தேர்ந்தெடுத்தார். அத்துடன் ஹர்திக் பாண்டியாவிடமிருந்து துணைக் கேப்டன்ஷிப் பதவியும் பறிக்கப்பட்டது. இந்நிலையில் கேப்டன்ஷிப் பதவியில் ரோகித் சர்மாவின் வாரிசாக இருந்த பாண்டியாவை பிசிசிஐ அந்தப் பதவியிலிருந்து பிரித்து விட்டதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
இருப்பினும் அதற்கெல்லாம் கவலைப்படாமல் அடுத்தடுத்த ஐசிசி கோப்பைகளை வெல்ல உதவிய பாண்டியாவை 2025 ஐபிஎல் தொடரில் மும்பை ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவிக்காமல் மனதார ஏற்றுக்கொள்வார்கள் என்று அவர் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இது பற்றி ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு. “இந்த ஐபிஎல் பாண்டியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. ஒரு கட்டத்தில் அவர் ரோஹித் சர்மாவுக்குப் பின் வாரிசு கேப்டனாக இருந்தார்”
“ரோகித் சர்மா இல்லாத நேரங்களில் இந்தியாவை வழி நடத்திய அவர் வெள்ளைப்பந்து அணியின் அடுத்த கேப்டனாக வலம் வந்தார். இருப்பினும் திடீரென அவர் கேப்டன்ஷிப் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டார். யாருமே அவரைப் பற்றி பேசவில்லை. துணைக் கேப்டன்ஷிப் பொறுப்பும் பறிக்கப்பட்டது. ஆனாலும் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் ஒவ்வொரு போட்டியிலும் அசத்தினார்”
இதையும் படிங்க: பெங்களுரு அணியின் கேப்டனாக இதுவே என்னுடைய இலக்கு – ராஜாத் பட்டிதார் அதிரடி
“குஜராத்துக்காக கோப்பையை வென்ற அவர் அடுத்த வருடம் ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார். தற்போது சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுள்ளது அவரது பெயரை மீட்டுக் கொண்டு வந்துள்ளது. எனவே இம்முறை அவரால் மும்பை அணிக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியுமா? இம்முறை ரசிகர்களும் அவரை முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள்” எனக் கூறினார்.