
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைச் சந்தித்தது. அந்தத் தோல்விக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த சுழலுக்கு சாதகமான ஆடுகளம் முக்கிய காரணமாக அமைந்தது. அது போக சாய் சுதர்சனை திடீரென கழற்றி விட்ட பயிற்சியாளர் கௌதம் கம்பீர் 3வது இடத்தில் ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை விளையாட வைத்ததும் தோல்விக்கு காரணமானதாக சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.
இந்நிலையில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்திய அணியில் ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு விதமான சோதனைகளை செய்வதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அதிருப்தியை தெரிவித்துள்ளார். அப்படி செய்வதால் இளம் இந்திய அணி எந்த வகையிலும் வளராது என்று ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். எனவே இந்த நேரத்தை வீணடிக்கும் செயலை கம்பீர் கை விட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு. “பந்து வீச்சில் அசத்தக்கூடிய வாஷிங்டன் சுந்தர் தம்மை டாப் ஆர்டரில் விளையாடக்கூடிய நல்ல வீரர் என்பதைக் காண்பித்துள்ளார். ஆனால் இங்கே நீங்கள் ஒவ்வொரு தொடருக்குப் பின்பும் அணியின் இலக்குகளை மாற்றிக்கொண்டே இருக்கப் போகிறீர்களாக? என்பது கௌதம் கம்பீரும் இந்திய அணி நிர்வாகமும் பதிலளிக்க வேண்டிய மிகப்பெரிய கேள்வியாகும்”
“நாம் இந்தியாவுக்கு திரும்பிய பின் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பைக் கொடுத்தோம். அந்த வாய்ப்பில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 87, 39 ரன்கள் அடித்த சுதர்சன் தமக்குக் கொடுத்த வாய்ப்பை 2 கைகளாலும் பிடித்துக் கொண்டார். நீங்கள் சுந்தரை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையைக் கொண்டுள்ளீர்கள்”
“ஆனால் சுந்தர் உங்களுடைய நீண்ட காலத் திட்டத்தின் அங்கமாக இருந்தால் பின்னர் எதற்காக சுதர்சன் அல்லது கருண் நாயருக்கு 3வது இடத்தில் வாய்ப்பைக் கொடுத்து நேரத்தை வீணடிக்க வேண்டும்? நீங்கள் திறமையை மட்டும் பார்க்காமல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவையான உறுதி, பொறுமை ஆகியவற்றையும் பார்த்து பேட்ஸ்மேன்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதனாலேயே அங்கே ஒரு வேலையை மட்டும் செய்யக்கூடிய ஸ்பெஷலிஸ்ட் வீரர்களை நீங்கள் விரும்புவீர்கள்”
இதையும் படிங்க: 2வது டெஸ்டில் கில் விட்ட.. கடினமான கேப்டன்ஷிப் வேலையை அவர் பாத்துக்குவாரு.. பாண்டிங் நம்பிக்கை
“உங்களுடைய டாப் 4 – 5 பேட்ஸ்மேன்கள் பேட்டிங் தவிர்த்து வேறு வேலையை செய்யக்கூடாது. ஒருவேளை நீங்கள் சுந்தரை பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுத்திருந்தால் அது நியாயமான தேர்வு. ஆனால் அதற்காக கடந்த 6 – 7 மாதங்களாக நீங்கள் செய்த மற்ற முயற்சிகள் அனைத்தும் வீணாகியுள்ளது. அதிலிருந்து நீங்கள் எதையுமே சம்பாதிக்கவில்லை” என்று கூறினார்.