IPL 2023 : இதுவே விராட் கோலிக்கு எதிரா பாகிஸ்தான் வீரர் அப்டி பண்ணிருந்தா விடுவீங்களா? ரசிகர்களுக்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி

- Advertisement -

பரபரப்பான போட்டிகளுடன் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 11ஆம் தேதி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 56வது லீக் போட்டியில் கொல்கத்தாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் துவம்சம் செய்த ராஜஸ்தான் புள்ளி பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து சுமாராக செயல்பட்ட கொல்கத்தா நிர்ணயித்த 150 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு கேப்டன் நிதிஷ் ராணா வீசிய முதல் ஓவரிலயே வரலாற்றில் அதிகபட்சமாக 26 ரன்கள் விளாசி சாதனை படைத்த ஜெய்ஸ்வால் ராக்கெட் வேகத்தில் 13 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரை சதமடித்த வீரராக சாதனை படைத்தார்.

அப்படி கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய அவர் 12 பவுண்டரி 5 சிக்சருடன் 98* (47) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுக்க கேப்டன் சஞ்சு சாம்சன் தனது பங்கிற்கு 48* (29) ரன்கள் எடுத்ததால் 13.1 ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்த ராஜஸ்தான் மிரட்டல் வெற்றி பெற்றது. மறுபுறம் இந்த படுதோல்வியால் பிளே ஆப் சுற்று வாய்ப்பிலிருந்து கொல்கத்தா 95% ஏமாற்றத்துடன் வெளியேறியது. அதை விட அப்போட்டியில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட போது 12வது ஓவரின் கடைசி பந்தை சஞ்சு சாம்சன் எதிர்கொண்டார்.

- Advertisement -

சும்மா விடுவீங்களா:
ஆனால் அதை வீசிய சூயஸ் சர்மா தங்களது பிளே ஆப் சுற்று வாய்ப்பை பறித்த ஜெய்ஸ்வால் 94* ரன்களில் எதிர்ப்புறம் இருந்ததால் அவரை சதமடிக்க விடக்கூடாது என்ற நோக்கத்துடன் ஒய்ட் போல லெக் சைட் திசையில் வேண்டுமென்றே வீச முயற்சித்தது அப்பட்டமாக தெரிந்தது. ஏனெனில் அவ்வாறு ஒயிட் வீசினால் வெற்றிக்கு 3 ரன் மட்டுமே தேவைப்பட்ட போது 1 எக்ஸ்ட்ரா ரன் போக எக்ஸ்ட்ரா வீசப்படும் பந்தில் எப்படியும் சஞ்சு சாம்சன் எஞ்சிய ரன்களை அடித்து விடுவார் அப்படியானால் ஜெயிஸ்வால் சதமடிக்க முடியாது என்ற எண்ணத்துடன் அவர் அவ்வாறு வீசினார்.

இருப்பினும் அதை சாதுரியமாக வலது புறம் சென்று அப்படியே தடுத்து நிறுத்திய சாம்சன் அடுத்த ஓவரில் சிக்சர் அடித்து சதமடிக்குமாறு ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதைத்தொடர்ந்து அடுத்த பந்தில் பவுண்டரி மட்டுமே அடித்த அவர் 98* ரன்கள் எடுத்து சதத்தை நழுவ விட்டது வேறு கதை. ஆனால் ஆசிய கோப்பையில் விரேந்தர் சேவாக் சதமடிக்க கூடாது என்பதற்காக வேண்டுமென்றே நோபால் போட்ட சுராஜ் ரண்டிவ் போல இப்போட்டியில் செயல்பட்ட சூயஸ் சர்மாவை ஏராளமான ரசிகர்கள் வெளுத்து வாங்கினர். குறிப்பாக ஜெய்ஸ்வால் சதமடிப்பதை தடுக்க ஒய்ட் வீசியது சரியானதல்ல என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்தார்.

- Advertisement -

ஆனாலும் எதிரணியினர் சாதனை படைப்பதை எதற்காக தடுக்க வேண்டும். மேலும் ஒரு பவுலர் ஒய்ட் வீசுவதில் எந்த தவறுமில்லை என ஒரு ரசிகர் அவரை விமர்சித்தார். அதற்கு “வேண்டுமென்றே ஒய்டு பந்து வீசுவதில் தவறில்லையா? இந்த கருத்தைக் கொண்ட நீங்கள் கிரிக்கெட்டில் விளையாடாதது நல்லது. வேண்டுமென்றே ஒய்டு அல்லது நோபால் வீசுவது மோசமான பழக்கம். இதையே ஒரு பாகிஸ்தான் பவுலர் விராட் கோலி சதமடிப்பதை தடுப்பதற்காக செய்வதாக நினைத்துப் பாருங்கள். அந்த சூழ்நிலையில் இப்போது பேசும் இதே நபர்கள் எப்படி அது சரியாகும் என்று அந்த பவுலரின் பெயரை ட்ரெண்டிங் செய்வார்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IPL 2023 : சேவாக் மாதிரி ஆடுறாரு, நான் தேர்வுக்குழு தலைவரா இருந்தா அவர உ.கோ’க்கு செலக்ட் பண்ணுவேன் – ரெய்னா கோரிக்கை

அவர் கூறுவதைப் போல பொதுவாக ஒயிடு அல்லது நோபால் பந்துகளை வீசுவதில் எந்த தவறுமில்லை. ஆனால் எதிரணி வீரர் சதமடிக்கும் தருவாயில் அதை தொட விடக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் செயல்படுவது கிரிக்கெட்டின் நேர்மை தன்மைக்கு புறம்பானது என்றே சொல்லலாம். எனவே பெரும்பாலான ரசிகர்கள் அந்த சமயத்தில் சூயஸ் சர்மா அவ்வாறு செயல்பட்டிருக்கக் கூடாது என்று தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement