இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்த ஆரம்பத்திலேயே வலுவான துவக்கத்தை பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து பேட்டிங்கில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா சுமாராக செயல்பட்டு வெறும் 296 ரன்களுக்கு சுருண்டது.
குறிப்பாக ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் அதிகபட்சமாக ரகானே 89, ரவீந்திர ஜடேஜா 48, தாக்கூர் 51 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முக்கிய ரன்களை எடுத்து ஃபாலோ ஆன் அவமானத்திலிருந்து காப்பாற்றினர். ஆஸ்திரேலிய சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா மீண்டும் சிறப்பாக செயல்பட்டு 270/8 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்து இந்தியா வெற்றி பெறுவதற்கு 444 என்ற சரித்திரத்தில் எட்டப்படாத மெகா இலக்கை நிர்ணயித்தது.
அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 66 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 47 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த சுப்மன் கில் அம்பயரின் சர்ச்சைக்குரிய கேட்ச் தீர்ப்பால் ஏமாற்றுத்துடன் 18 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா 43 ரன்கள் எடுத்திருந்த போது நேத்தன் லயன் சுழலில் சுமாரான ஷாட்டை அடித்து அவுட்டாக அடுத்த ஓவரிலேயே மறுபுறம் காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட புஜாராவும் 27 ரன்களில் மோசமான ஷாட்டை அடித்து பெவிலியன் திரும்பினார்.
அதனால் 93/3 என தடுமாறிய இந்தியாவை அடுத்ததாக ஜோடி சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் அஜிங்க்ய ரகானே ஆகியோர் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தி சரிவை சரி செய்ய போராடினர். அதில் ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றிய ரகானே மிகவும் மெதுவாக பேட்டிங் செய்த நிலையில் மறுபுறம் விராட் கோலி தமக்கே உரித்தான ஸ்டைலில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அந்த வகையில் மாலை நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்த அந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 69* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த போது 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இதுவரை 164/3 ரன்கள் எடுத்துள்ள இந்தியா வெற்றி பெறுவதற்கு கடைசி நாளில் குறைந்தபட்சம் 97 ஓவர்களில் இன்னும் 287 ரன்கள் தேவைப்படுகிறது. அதே சமயம் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு இன்னும் 7 விக்கெட்கள் தேவைப்படுவதால் இந்த போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக களத்தில் மகத்தான விராட் கோலி 44* ரன்களுடனும் ரகானே 20* ரன்களுடனும் இருப்பதால் இந்தியா வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் அவர்களுக்கு அடுத்தபடியாக அதிரடியாக விளையாடுவதற்கு ரிஷப் ண்ட் போன்ற ஒருவர் இல்லாதது தைரியமாக விளையாடாமல் கட்டுப்பாட்டுடன் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தை விராட் கோலி மற்றும் ரகானே ஆகியோருக்கு ஏற்படுத்தும் என்று சொல்லலாம். அத்துடன் 4வது இன்னிங்ஸில் வெறும் 200 ரன்களை துரத்துவதே கடினம் என்ற நிலைமையில் கடைசி நாளில் இன்னும் பிட்ச் சுழலுக்கு சாதகமாக மாறும் என்பதால் தரமான பவுலர்களை கொண்ட ஆஸ்திரேலிய இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:WTC Final : உச்சக்கட்ட பரபரப்பில் ஃபைனல், ஆஸிக்கு சவாலாக 5வது நாளில் விராட் கோலி – ரகானே இந்தியாவை காப்பாற்றுவார்களா?
மேலும் பரத், தாக்கூர் ஆகியோரை தவிர்த்து பேட்ஸ்மேன்கள் இல்லாததால் முடிந்த வரை விக்கெட்டுகளை விடாமல் 97 ரன்கள் நிலைத்து நின்று இப்போட்டியை டிரா செய்தாலே ஐசிசி விதிமுறைப்படி கோப்பையை பகிர்ந்து கொண்டு இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லும். அதனால் வெற்றி அல்லது எப்படியாவது டிரா செய்து இப்போட்டியில் கோப்பையை வெல்லுங்கள் என்று இந்திய அணிக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்கின்றனர்.



