WTC Final : உலக சாதனை செஞ்சுட்டு கோப்பைல கை வைங்க, ஆஸி மாபெரும் இலக்கு – 1979இல் தவறிய சரித்திரத்தை இந்தியா படைக்குமா?

IND vs AUS
- Advertisement -

இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த ஜூன் 7ஆம் தேதி துவங்கிய 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் சதமடித்து 163 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்களை சாய்த்தார். அதைத்தொடர்ந்து பேட்டிங்கில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 15, கில் 13, விராட் கோலி 14, புஜாரா 14 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்றனர்.

அதனால் 71/4 என சரிந்த இந்தியாவை ரவீந்திர ஜடேஜா 48, ரகானே 89, ஷர்துல் தாக்கூர் 51 என மிடில் ஆர்டர் பொறுப்பான முக்கிய ரன்களை எடுத்து ஃபாலோ ஆனை தவிர்க்க உதவினர். இருப்பினும் இந்தியாவை 296 ரன்களுக்கு சுருட்டி 173 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு டேவிட் வார்னர் 1, உஸ்மான் கவாஜா 1, டிராவிஸ் ஹெட் 18 என முக்கிய வீரர்களை குறைந்த ரன்களுக்கு அவுட்டாக்கி இந்தியா போராடியது.

- Advertisement -

இருப்பினும் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் 41, ஸ்டீவ் ஸ்மித் 34, கேமரூன் கிரீன் 25 என முக்கிய வீரர்கள் கணிசமான ரன்களை எடுத்து சவாலை கொடுத்த நிலையில் 7வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தொல்லை கொடுத்த மிட்சேல் ஸ்டார்க் 41 ரன்களை எடுத்து 400 ரன்கள் முன்னிலையை தாண்ட உதவினார். இறுதியில் அவருடன் அசத்திய அலெக்ஸ் கேரி 66* ரன்கள் எடுத்த போது 270/8 ரன்களுடன் தங்களுடைய 2வது இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்த ஆஸ்திரேலியா இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதன் காரணமாக இந்த கோப்பையை வெல்ல வேண்டுமெனில் 145 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக துரத்த வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் இதற்கு முன் 2003இல் இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் 418 ரன்களை சேசிங் செய்ததே உலக சாதனையாக இருக்கிறது.

- Advertisement -

சொல்லப்போனால் இந்தியாவும் கடந்த 1972ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதிகபட்சமாக 403 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்ததே முந்தைய சாதனையாகும். அது போக இப்போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தில் 1902ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 263 ரன்களை 1 விக்கெட் வித்தியாசத்தில் எட்டிப் பிடித்ததே வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட முந்தைய அதிகபட்ச இலக்காகும்.

ஆனால் பொதுவாக சாதாரண டெஸ்ட் போட்டியிலேயே 4வது இன்னிங்ஸில் வெறும் 150 – 200 ரன்களை சேசிங் செய்வதை கடினமாக பார்க்கப்படும் நிலையில் இந்த மாபெரும் அழுத்தம் நிறைந்த ஃபைனலில் ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் திண்டாடிய இந்திய பேட்ஸ்மேன்கள் அதை செய்வார்களா என்பதே ரசிகர்களின் கவலையாகும். இருப்பினும் இப்போட்டியை டிரா செய்தாலே கோப்பையை பகிர்ந்து கொள்ள முடியும் என்பது ஐசிசி விதிமுறையாகும்.

- Advertisement -

அந்த நிலையில் இதற்கு முன் இதே ஓவல் மைதானத்தில் கடந்த 1979இல் இங்கிலாந்து நிர்ணயித்த 437 ரன்கள் இலக்கை சுனில் கவாஸ்கரின் இரட்டை சதத்தால் கிட்டதட்ட நெருங்கிய இந்தியா 429/8 ரன்கள் எடுத்து நூலிழையில் உலக சாதனை வெற்றியை தவற விட்டு டிரா செய்தது. எனவே அன்றைய நாளில் தவற விட்ட மேஜிக் வெற்றியை 44 வருடங்கள் கழித்து இப்போட்டியில் இந்தியா பெறுமா என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:WTC Final : உலக சாதனை செஞ்சுட்டு கோப்பைல கை வைங்க, ஆஸி மாபெரும் இலக்கு – 1979இல் தவறிய சரித்திரத்தை இந்தியா படைக்குமா?

ஒருவேளை வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை குறைந்தபட்சம் உடம்பில் அடிகளை வாங்கியாவது இப்போட்டியை டிரா செய்து கோப்பையை பகிர்ந்து கொண்டு வாருங்கள் என்பதே இந்திய அணிக்கு ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Advertisement