IPL 2023 : பாவம் அவரு, இது எப்படி அவுட்? ரோஹித்தை தவறான தீர்ப்பால் காலி செய்த அம்பயரை விளாசும் கைஃப், முனாப் படேல்

ROhit Sharma LBW
- Advertisement -

மிகுந்த போட்டியுடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 6 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பொதுவாகவே ஆரம்பத்தில் தோல்வியை சந்தித்து மெதுவாக துவங்கினாலும் அதன் பின் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று கம்பேக் கொடுக்கும் ஸ்டைலை கொண்ட மும்பை இந்த சீசனிலும் ஆரம்பத்தில் தடுமாறினாலும் சமீபத்திய போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று பெங்களூருவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 200 ரன்களை வெறும் 16.3 ஓவரில் சேசிங் செய்து புள்ளி பட்டியலில் 8வது இடத்திலிருந்து நேராக 3வது இடத்திற்கு முன்னேறியது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு டு பிளேஸிஸ் 65 (41) ரன்களும் மேக்ஸ்வெல் 68 (33) ரன்களும் எடுத்தும் இதர வீரர்கள் அதிரடி காட்ட தவறியதால் 20 ஓவரில் 199/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதை துரத்திய மும்பைக்கு இசான் கிசான் 42 (21) ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் சரவெடியாக 360 டிகிரியிலும் 83 (35) ரன்களும் நேஹல் வதேரா 52* (34) ரன்கள் எடுத்து பெங்களூரு பவுலர்களை துவம்சம் செய்து எளிதாக வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

பாவம் ரோஹித்:
ஆனால் அந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா மட்டும் 7 (8) ரன்னில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார். ஒரு காலத்தில் ஹிட்மேன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அளவுக்கு அதிரடியாக விளையாடி 5000+ ரன்களை குவித்து அசத்திய அவர் சமீப காலங்களுக்குவே தடுமாறும் நிலையில் கடந்த 2 போட்டிகளில் அடுத்தடுத்த டக் அவுட்டாகி ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரராக மோசமான சாதனை படைத்தார். அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த போட்டியில் பவுண்டரியுடன் அதிரடியை துவக்கினார்.

ஆனால் வணிந்து ஹஸரங்கா வீசிய 5வது ஓவரின் 5வது பந்தில் சற்று இறங்கி வந்து லெக் சைட் திசையில் அடிக்க முயற்சித்த ரோஹித் சர்மா பந்தை தவற விட்டார். அது காலில் பட்டதால் பெங்களூரு அணியினர் அவுட் கேட்ட போதிலும் களத்தில் இருந்த நடுவர் கொடுக்க மறுத்து விட்டார். இருப்பினும் அது அவுட் என்பதில் உறுதியாக இருந்த பெங்களூரு கேப்டன் டு பிளேஸிஸ் ரிவியூ எடுத்தார். அதை சோதித்த 3வது நடுவர் அல்ட்ரா எட்ஜ் தொழில் நுட்பத்தில் பந்து பேட்டில் படவில்லை என்பதை உறுதி செய்து கொண்டார்.

- Advertisement -

இருப்பினும் பால் டிராக்கிங் தொழில்நுட்பத்தில் பந்து ஸ்டம்ப்களில் பட்டதால் 3வது நடுவர் நிதின் மேனன் அவுட் கொடுத்ததால் ரோகித் சர்மா ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். குறிப்பாக இறங்கி வந்து அடித்ததால் 3 மீட்டரை கடந்திருப்போம் என்பதால் அது நிச்சயமாக அவுட் இருக்காது என்று எதிர்பார்த்த ரோகித் சர்மா இறுதியில் அவுட் கொடுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் சென்றார். சொல்லப்போனால் 3 மீட்டர் காரணமாகவே களத்தில் இருந்த நடுவர் முதலில் அவுட் கொடுக்கவில்லை.

இந்நிலையில் அந்தப் பந்து ரோகித் சர்மாவின் காலில் பட்டதற்கும் ஸ்டம்ப்புகளுக்கும் இடையே 3.7 மீட்டர் தூரம் இருக்கும் போது எப்படி எல்பிடபுள்யூ முறையில் அவுட் கொடுத்தீர்கள் என்று முன்னாள் வீரர் முனாப் பட்டேல் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதே போல இது எப்படி அவுட்டாகும்? என்று மற்றொரு முன்னாள் வீரர் முகமது கைஃப் அம்பயரை சாடியுள்ளார். அவர்கள் கூறுவது போல இது பற்றி விதிமுறை பின்வருமாறு.

- Advertisement -

“ஸ்டம்ப்புக்கும் பந்து காலில் படும் புள்ளிக்கு இடையேயான தொலைவு 300 சென்டிமீட்டருக்கு மேலே இருந்தால் களத்தில் இருக்கும் பேட்ஸ்மேன் நாட் அவுட்டாக இருப்பார்” என்று கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ரோஹித் சர்மா தெளிவாக அவுட் இல்லாத நிலையில் எப்படி அவுட் கொடுத்தீர்கள் என்று முன்னாள் வீரர்கள் அதை கொடுத்த பிரபல சர்ச்சை அம்பயர் நிதின் மேனனை சமூக வலைதளங்களில் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: IPL 2023 : சூர்யகுமாரின் முரட்டு அடியால் 2 ஆல் டைம் ஐபிஎல் சாதனைகளை உடைத்த மும்பை – 2 வெறித்தனமான வரலாற்று சாதனை

மேலும் ஏற்கனவே தடுமாறும் ரோகித் சர்மாவை தவறான தீர்ப்பால் காலி செய்த நித்தின் மேனனை விளாசும் மும்பை ரசிகர்கள் எங்கள் கேப்டன் பாவம் என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement