ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு பயணித்து விளையாடி வருகிறது. நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சுமாராக செயல்பட்ட சீனியர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து 2024 உலக கோப்பைக்கு முன்பாக புதிய அணியை உருவாக்குமாறு எழுந்த கோரிக்கைக்கு செவிசாய்த்த பிசிசிஐ தேர்வுக்குழுவை கூண்டோடு நீக்கி பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்து அதிரடி வேலைகளை துவங்கியுள்ளது. இருப்பினும் இந்திய மண்ணில் நடைபெறும் 2023 50 ஓவர் உலக கோப்பையில் கடைசி முறையாக மீண்டும் ரோகித் சர்மாவே கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த 2017 முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி இருதரப்பு தொடர்களில் அசத்திய போதிலும் உலக கோப்பையை வென்று தரவில்லை என்பதால் அதிரடியாக நீக்கப்பட்டு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் வழக்கம் போல இருதரப்பு தொடர்களில் வென்ற இந்தியா அழுத்தமான ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியடைந்ததால் எந்த மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படவில்லை ரசிகர்களும் வாரியமும் உணர்ந்தது. அதை விட கேப்டனாக எப்போதும் அணியுடன் தொடர்ந்து விளையாட வேண்டிய அவர் பெரும்பாலும் பணிச்சுமை என்ற பெயரில் ஓய்வெடுப்பதால் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருடம் 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய அவலம் இந்தியாவுக்கு ஏற்பட்டது.
என்ன பண்றிங்க:
அதனால் அதற்கு விராட் கோலியே பரவாயில்லை என்று ரசிகர்கள் பேசும் நிலையில் டி20 உலக கோப்பையில் இந்தியா தோற்பதற்கு ரோஹித் சர்மாவின் சுமாரான பேட்டிங், கேப்டன்ஷிப் என்பதையும் தாண்டி தொடர்ச்சியாக விளையாடாமல் ஓய்வெடுத்தது ஒரு காரணமாக அமைந்ததாக அஜய் ஜடேஜா போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். ஏனெனில் உலகக் கோப்பையை வெல்ல முதலில் கேப்டன் தொடர்ந்து விளையாடினால் தான் அவரது தலைமையில் இதர வீரர்களும் ஒருங்கணைந்து அணியாக செட்டிலாக முடியும். அத்துடன் நாட்டுக்காக ஓய்வெடுக்கும் நீங்கள் ஐபிஎல் தொடரில் ஓய்வெடுக்காதது ஏன்? என்று சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பினார்.

சரி போனது போகட்டும் அடுத்ததாக 2023இல் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தின் முதல் தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்ற வருகிறது. இருப்பினும் அதில் ஓய்வெடுக்கும் ரோகித் சர்மா அடுத்த மாதம் கத்துகுட்டி வங்கதேசத்துக்கு எதிராக சுற்றுப்பயணத்திற்கு தயாராகிறேன் என்ற பெயரில் மும்பையில் பயிற்சி எடுத்து வருகிறார். ஆனால் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் ஆஸ்திரேலியா கமின்ஸ் போன்ற எதிரணிகளின் கேப்டன்கள் 2023 உலக கோப்பையை வெல்ல தயாராக களமிறங்கி விளையாடும் நிலையில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்தனர். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“இது நியாயமான கேள்வியாகும். உங்களுடைய பரிசோதனைக்கான நேரங்கள் முடிந்து விட்டது. எனவே 2023 உலக கோப்பையில் கேப்டனாக விளையாடுவார் என்று கருதப்படும் ரோகித் சர்மா குறைந்தபட்ச இடைவெளிகளை மட்டுமே எடுக்க வேண்டும். நீங்கள் ஓய்வெடுக்க விரும்பினால் ஐபிஎல் தொடரில் எடுங்கள். இங்கே இலங்கையை பாருங்கள். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடும் அவர்களது அணியில் கேப்டன் சனாக்கா உள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து விளையாடிய ஒருநாள் தொடரில் கேப்டன் ஜோஸ் பட்லர் விளையாடினார். அதே தொடரில் ஆஸ்திரேலியாவின் கேப்டன் பட் கமின்ஸ் விளையாடினார்”

“அந்த வகையில் ஒரு அணி தயாராவதற்கு கேப்டன் மற்றும் பயிற்சியாளர் முழு பொறுப்பை ஏற்க வேண்டும். அணியுடன் நீங்கள் அதிக நேரத்தை செலவிட்டால் தான் அதில் இருக்கும் வீரர்களின் குணங்களையும் திறமைகளையும் அறிய முடியும். ஆனால் அதை செய்யாத உங்களால் கடைசி நேரத்தில் எதையும் கையாள முடியாது. சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா தொடரில் கேப்டனாக செயல்பட்ட ஷிகர் தவான் தற்போது தொடர்ச்சியாக 4வது தொடராக நியூசிலாந்தில் களமிறங்கியுள்ளார். ஆனால் திடீரென்று வங்கதேசத்துக்கு அவர் இல்லாமல் ரோகித் சர்மா தலைமை ஏற்றால் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும். இது உலக கோப்பைக்கு தயாராகும் சரியான திட்டம் கிடையாது” என்று கூறினார்.



