நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் இளம் இந்திய முதலில் நடந்த டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் கோப்பையை வென்ற நிலைமையில் ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் களமிறங்கியுள்ளது. இருப்பினும் நவம்பர் 25ம் தேதியன்று ஆக்லாந்து நகரில் துவங்கிய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்ற நியூசிலாந்து 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று டி20 தொடரில் சந்தித்த தோல்விக்காக இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 306/7 ரன்களை குவித்தது.
இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஷிகர் தவான் 77, சுப்மன் கில் 50, ஸ்ரேயாஸ் ஐயர் 80 என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை குவித்தனர். அதைத்தொடர்ந்து 307 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு ஃபின் ஆலன் 22, டேவோன் கான்வே 24, டார்ல் மிட்சேல் 15 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் 4வது விக்கெட்டுக்கு 221 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த டாம் லாதம் 145* ரன்களும் கேப்டன் வில்லியம்சன் 94* ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தனர். அதனால் இத்தொடரை கைப்பற்ற எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
கலாய்த்த மைக்கேல் வாகன்:
முன்னதாக இப்போட்டியில் 306 ரன்களை எடுத்தும் ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகளை சாய்த்தும் இந்தியாவை வெற்றி பெற விடாத அளவுக்கு அற்புதமாக பார்ட்னர்ஷிப் அமைத்த லாதம் – வில்லியம்சன் ஜோடி 307 ரன்கள் இலக்கை 270 போல் எளிதாக சேசிங் செய்து விட்டதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் ட்விட்டரில் பாராட்டினார். அதே சமயம் 50 ஓவர்களை வீசுவதற்கு கச்சிதமாக 5 பவுலர்களை மட்டும் பயன்படுத்தி இந்தியா தவறு செய்ததாகவும் அவர் சுட்டிக் காட்டினார். அதைப் பார்த்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் “அவர்கள் (இந்தியா) காலம் கடந்த ஒருநாள் கிரிக்கெட் அணி. உங்களுக்கு 6 முதல் 7 பந்து வீச்சாளர்கள் தேவைப்படுகிறது” என்று தமக்கே உரித்தான பாணியில் பதிலளித்து கலாய்த்தார்.
கிரிக்கெட்டை கண்டுபிடித்து ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறிய இங்கிலாந்து 2017க்குப்பின் அதிரடியாக விளையாடும் அணுகு முறையை பின்பற்றி 2019 உலக கோப்பையை வென்று நடைபெற்று முடிந்த 2022 டி20 உலக கோப்பையும் முத்தமிட்டது. அந்த வகையில் வரலாற்றில் ஒரே நேரத்தில் 20 ஓவர் மற்றும் 50 ஓவர் கோப்பைகளை வென்ற முதல் அணியாக சரித்திரம் படைத்துள்ள இங்கிலாந்து வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தற்சமயத்தில் உலகில் இதர அணிகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. அதன் காரணமாக இதர அணிகள் குறிப்பாக ஐபிஎல் தொடரை நடத்தியும் 2013க்குப்பின் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வரும் இந்தியா தங்களுடைய வெட்டி வீராப்பை தூக்கி எறிந்து விட்டு இங்கிலாந்தை பின்பற்ற வேண்டுமென மைக்கேல் வாகன் சமீபத்தில் கூறியிருந்தார்.
அத்துடன் இந்தியா காலம் கடந்த பழைய யுக்திகளை கடைப்பிடித்து பழைய அணுகு முறையை பின்பற்றி விளையாடுவதாகவும் அவர் கூறியிருந்தார். தற்போது அதை மீண்டும் சுட்டிக்காட்டும் அவர் முதன்மை பவுலர்கள் தடுமாறும் போது பகுதி நேர பந்து வீச்சாளர்கள் வந்து பந்து வீசும் லேட்டஸ்ட் யுக்தியை பயன்படுத்தாமல் அதே 50 ஓவர்களுக்கு 5 பவுலர்கள் என்ற பழைய காலத்து டெக்னிக்கை இந்தியா கடைப்பிடிப்பதாக மறைமுகமாக விமர்சித்துள்ளார். அவர் கூறுவதும் ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது.
ஏனெனில் ஒரு காலத்தில் சச்சின் முதல் சுரேஷ் ரெய்னா வரை பகுதி நேர பந்து வீச்சாளர்கள் இதுபோன்ற முதன்மை பவுலர்கள் தடுமாறும் நேரங்களில் வந்து விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்த வரலாறுகள் உள்ளது. ஆனால் அந்த யுத்தியை இப்போதைய அணி கடைபிடிப்பதில்லை என்பது இந்திய ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக இருக்கிறது. இருப்பினும் எப்போதும் இந்தியாவை கலாய்க்கும் உங்களது சிறந்த அணி ஏன் ஆஸ்திரேலிய மண்ணில் 3 – 0 என்ற கணக்கில் வைட் வாஷ் தோல்வியை சந்தித்தது என்று மைக்கேல் வாகனுக்கு வழக்கம் போல இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.



