சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வருகிறது. அதில் 2007க்குப்பின் 15 வருடங்களாக 2வது கோப்பை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து சாம்பியன் பட்டம் வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா வழக்கம் போல சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆனால் வலுவான இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற அழுத்தமான நாக் அவுட் போட்டியில் வழக்கம் போல சொதப்பி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா பைனலுக்கு தகுதி பெறாமல் பரிதாபமாக வெளியேறியது.
அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் போராடி 168/8 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 50 (40) ரன்களும் கடைசி நேரத்தில் மிரட்டிய ஹர்திக் பாண்டியா 63 (33) ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டான் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 169 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு முதல் பந்திலிருந்தே சுமாராக செயல்பட்ட இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கிய கேப்டன் ஜோஸ் பட்லர் 80* (49) ரன்களும் அலெக்ஸ் ஹேல்ஸ் 86* (47) ரன்களும் விளாசி 16 ஓவரிலேயே 170/0 ரன்கள் எடுக்க வைத்து பைனலுக்கு அழைத்துச் சென்றனர்.
பேசாமா ரிட்டையர் ஆகிடுங்க:
மறுபுறம் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வெல்லும் என்று ஆசையுடன் காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை பரிசளித்த இந்திய அணி பெட்டி படுகையை கட்டிக்கொண்டு இந்த உலக கோப்பையிலிருந்து வெளியேறியது. இந்த தோல்விக்கு மோசமான பவுலிங் ஒரு காரணமாக அமைந்த நிலையில் 30 ரன்களை கூட எடுக்காத ஓப்பனிங் ஜோடியின் படுமோசமான ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. ஏனெனில் அதே பிட்ச்சில் எதிரணியின் ஓப்பனிங் ஜோடி அசால்டாக 170 ரன்கள் குவித்த நிலையில் உலகத்தரம் வாய்ந்த கிளாஸ் பேட்ஸ்மேன்கள் என போற்றப்படும் ரோஹித் – ராகுல் மொத்தமாக சொதப்பியதே இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
1. முன்னதாக ஆரம்பம் முதலே இந்த உலகக் கோப்பையில் பின்னடைவை ஏற்படுத்தி வந்த அவர்கள் நாக் அவுட் சுற்றில் அசத்துவார்கள் என்று நம்பி காத்திருந்த ரசிகர்களுக்கு கடைசி வரை ஏமாற்றமே மிஞ்சியது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் பேட்டிங் துறையில் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் இல்லை என்றால் இந்தியா அரை இறுதிக்கு கூட வந்திருக்காது.
2. ஏனெனில் பவர்ப்ளே ஓவர்களில் அனலாக செயல்பட்டிருக்க வேண்டிய இவர்களில் ரோகித் சர்மா 109 பந்துகளில் வெறும் 116 ரன்களை 106 என்ற மோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். மறுபுறம் 106 பந்துகளை எதிர்கொண்ட கேஎல் ராகுல் வெறும் 128 ரன்களை 120 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.
3. மொத்தத்தில் அதிரடி தொடக்கத்தை கொடுக்க வேண்டிய ஓப்பனிங் ஜோடி இந்த உலகக் கோப்பையில் இணைந்து 215 பந்துகளை எதிர்கொண்டு 244 ரன்களை 113 என்ற மோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து இந்தியாவின் தோல்விக்கு முக்கிய பங்காற்றியுள்ளது.
இதில் கொடுமை என்னவெனில் இந்த இருவரும் தான் இந்திய அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன்கள் ஆவார்கள். பொதுவாகவே கேப்டன்கள் என்றால் இதர வீரர்களுக்கு முன்னோடியாக இதர வீரர்கள் உத்வேகம் அடையும் வகையில் முன்னின்று அபாரமாக செயல்படுவது அவசியமாகும். அதிலும் குறிப்பாக லீக் சுற்றில் தடுமாறினாலும் 2011 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மாஸ் காட்டிய தோனி போல நாக் அவுட் சுற்றில் அசத்த வேண்டியது கேப்டன்களின் கடமையாகும்.
ஆனால் பெயருக்காக கேப்டன்கள் என்ற அந்தஸ்துடன் இந்த உலகக் கோப்பையில் விளையாடிய நீங்கள் தோல்விக்கு காரணமாக அமைந்ததால் பேசாமல் ஓய்வு பெறுங்கள் அல்லது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுங்கள் என்று ரசிகர்கள் வெளிப்படையாகவே சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள்.



