2007க்குப்பின் 2வது டி20 உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் களமிறங்கிய ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் ரசிகர்களின் ஆரவாரத்துடன் பரபரப்பாக நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 159/8 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஷான் மசூட் 52* ரன்களும், இப்திகார் அகமது 51 ரன்களும் எடுத்தனர்.
அதை தொடர்ந்து 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா, ராகுல், சூரியகுமார் ஆகிய துருப்பு சீட்டு வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்று ஆரம்பத்திலேயே தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை 5வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்திய ஹர்திக் பாண்டியா 40 (37) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது களமிறங்கிய தினேஷ் கார்த்திக் பொறுப்பின்றி ஒய்ட் போல வீசப்பட்ட பந்தில் தேவையின்றி ஸ்டம்பிங் ஆகி இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்தார்.
இதெல்லாம் நியாயமா:
ஏனெனில் என்னதான் எதிர்ப்புறம் விராட் கோலி இருந்தாலும் அடுத்து களமிறங்கும் பேட்ஸ்மென் தான் அடுத்த கடைசி பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்ற புதிய விதிமுறைப்படி களமிறங்கிய அஷ்வின் தினேஷ் கார்த்திக் சிக்கிய அதே ஒயிட் வலையில் சிக்காமல் அறிவுப்பூர்வமாக செயல்பட்டு ஒரு எக்ஸ்ட்ரா ரன்னையும் பந்தையும் பெற்றார். அப்போது ஃபீல்டர்கள் உள்வட்டத்திற்குள் வந்தாலும் அசராத அவர் கடைசி பந்தில் லாவகமாக தூக்கி அடித்து இந்தியாவை 20 ஓவரில் 160/6 ரன்களை எடுக்க வைத்து வெற்றி பெற வைத்தார்.
இந்த வெற்றியால் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் முதல் முறையாக சந்தித்த தோல்விக்கு பாகிஸ்தானை இந்தியா பழி தீர்த்தது. இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் சூப்பர்மேனை போல் 82* (53) ரன்கள் குவித்து காப்பாற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார். இருப்பினும் வெற்றியை தீர்மானித்த கடைசி பந்தில் அற்புதமாக சிங்கிள் எடுத்து ஃபினிஷிங் செய்த அஷ்வினை விராட் கோலி உட்பட அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
முன்னதாக இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 7வது ஓவரில் பாகிஸ்தான் 42/2 என்று நிலையில் விளையாடிய போது முகமது சமி வீசிய ஒரு பந்தில் ஷான் மசூட் பவுண்டரி அடிக்க முயற்சித்தார். அது நேராக ஃபைன் லெக் பகுதியில் நின்று கொண்டிருந்த ரவிச்சந்திரன் அஷ்வின் நோக்கி சென்றது. அதை டைவ் அடித்து பிடித்த அஷ்வின் கேட்ச் பிடித்து விட்டோம் என்று நினைத்தாலும் டிவி ரீப்ளேயில் பந்து முதலில் தரையில் பட்டதால் அவுட் கொடுக்கப்படவில்லை. ஆனால் அந்த சமயத்தில் இன்னும் சற்று வேகமாக டைவ் அடித்திருந்தால் ஒருவேளை அவரால் கேட்ச் பிடித்திருக்கக்கூடும்.
அதை முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது ட்வீட்டரில் சுட்டிக்காட்டிய பின்வருமாறு. “இந்த தருணம் போட்டியை பாகிஸ்தானுக்கு சாதகமாக மாற்றலாம். இது போன்ற கேட்ச்கள் போட்டியை வென்று கொடுக்கும். இருப்பினும் இந்தியா இதில் வெல்லும் என நம்புவோம், காமான் தோழர்களே” என்று குறிப்பிட்டார். இருப்பினும் பொதுவாகவே ஃபீல்டிங் செய்வதில் சற்று மந்தமான அஷ்வின் 36 வயதானவர் என்பதால் அந்த சோடை அந்த இடத்தில் தெரிந்தது உண்மை தான். ஆனால் இதே யுவராஜ் சிங் சமீபத்திய ஆசிய கோப்பையில் இதே பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய போட்டியில் அர்ஷிதீப் சிங் எளிதான கேட்ச்சை கோட்டை விட்ட போது ஒரு கேட்ச் ஒரு வீரரின் திறமையை தீர்மானிக்காது என்று ஆதரவு கொடுத்தார்.
அங்கே அர்ஷிதீப் பஞ்சாப்பை சேர்ந்தவர் என்பதாலும் இங்கே முடிந்தளவுக்கு போராடி டைவ் அடித்து கேட்ச் பிடித்த அஷ்வின் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் இந்த இரட்டை நிலைப்பாடா? என்று ரசிகர்கள் யுவராஜுக்கு கேள்வி எழுப்புகிறார்கள். அத்துடன் 2014 டி20 உலக கோப்பை பைனலில் இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்த உங்களது ஆட்டத்தையும் கொஞ்சம் நினைத்துப் பார்க்குமாறு ரசிகர்கள் அவருக்கு பதிலடி கொடுப்பதை பார்க்க முடிகிறது.



