ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி அக்டோபர் 23ஆம் தேதியன்று மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. வருணபகவான் ஆசீர்வாதத்துடன் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 159/8 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு பாபர் அசாம் 0 (1) முகமத் ரிஸ்வான் 4 (12) என தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தாலும் 3வது விக்கெட்டுக்கு ஷான் மசூட் உடன் 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்த இப்பிதிகர் அஹமத் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 51 (34) ரன்களில் அவுட்டானார்.
அப்போது சடாப் கான் 5, ஹைதர் அலி 2, முகமத் நவாஸ் 9 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஹர்திக் பாண்டியாவிடம் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட்டானார்கள். ஆனால் மறுபுறம் நங்கூரமாக நின்ற இப்டிகர் அஹமத் கடைசி வரை அவுட்டாகாமல் 5 பவுண்டரியுடன் 52* (42) ரன்களும் சாஹீன் அப்ரிடி 16 (8) ரன்களும் எடுத்தனர் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஷிதீப் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதை தொடர்ந்து 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே ராகுல் 4 (8) ரன்களில் அவுட்டாகி செல்ல அவருக்கு பின்னாடியே கேப்டன் ரோகித் சர்மாவும் 4 (7) ரன்களில் நடையை கட்டினார்.
கிங் கோலி:
அப்போது காப்பாற்றுவார் என கருதப்பட்ட சூரியகுமார் 15 (10) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்த நிலையில் அக்சர் பட்டேல் தேவையின்றி 2 (3) ரன்களில் ரன் அவுட்டானார். அதனால் 31/4 ஆரம்பத்திலேயே திண்டாடிய இந்தியாவின் தோல்வி உறுதியாகி விட்டதாக ரசிகர்கள் கவலையடைந்த போது அண்ணன் தம்பிகளாக ஜோடி சேர்ந்த விராட் கோலி – ஹார்டிக் பாண்டியா ஆகியோர் ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் ரன்களை சேர்த்தனர்.
குறிப்பாக 12வது ஓவரில் 20 ரன்களை குவித்து இந்தியாவை தூக்கி நிறுத்திய இந்த ஜோடி 113 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது. அதனால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது 40 (36) ரன்களில் பாண்டியா முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அப்போது களமிறங்கிய தினேஷ் கார்த்திக் சிங்கிள் எடுக்க 3வது பந்தில் 2 ரன்கள் எடுத்த விராட் கோலி 4வது பந்தில் சிக்சர் அடித்தார். அதிர்ஷ்டவசமாக இடுப்பளவு வந்த அந்த பந்து நோ பால் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதை வீசிய நவாஸ் ஒய்ட் போட்டார்.
அதற்கடுத்த பந்தில் விராட் கோலி போல்ட்டாகியும் பிரீ ஹிட் என்பதால் அதைப் பயன்படுத்தி 3 ரன்களை எடுத்த இந்தியாவுக்கு 5வது பந்தில் தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிங் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது மீண்டும் ஒய்ட் வீசிய நவாஸை கடைசி பந்தை அற்புதமாக எதிர்கொண்ட அஷ்வின் பீல்டர்கள் உள்ளே இருந்தும் லாவகமாக தூக்கி அடித்து இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார். அதனால் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா கடந்த வருடம் துபாயில் வரலாற்று தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானை பழிக்கு பழி தீர்த்தது.
Same Rohit same! 🥹🥹#INDvPAK #ViratKohli @imVkohli @ImRo45 @hardikpandya7 pic.twitter.com/e9FuNguCAs
— Punjab Kings (@PunjabKingsIPL) October 23, 2022
இப்போட்டியில் கதை முடிந்தது என்று ரசிகர்கள் நினைத்தபோது பாண்டியாவுடன் அற்புதமாக ஜோடி சேர்ந்து மூழ்கிய இந்தியாவை நங்கூரம் போட்டு தூக்கி நிறுத்திய விராட் கோலி 6 பவுண்டரி 4 சிக்சர்கள் 82* (53) ரன்கள் குவித்து காப்பாற்றியதால் சந்தேகமின்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். அப்படி இந்தியாவை தோள் மீது சுமந்து வெற்றி பெற வைத்த விராட் கோலி ஒருசில நொடிகள் கண்கலங்கி வானத்தை பார்த்து நன்றி சொன்னார். அதைவிட அவரது ஆட்டத்தை பார்த்து வியந்த கேப்டன் ரோகித் சர்மா போட்டி முடிந்ததும் அவரை தனது தோள் மீது நண்பனுக்கு நண்பனாக தூக்கி ஒரு ரவுண்ட் சுற்றி வெற்றியை கொண்டாடி தீர்த்தார்.
கேப்டன்ஷிப் கைமாறியதில் இவர்களுக்கிடையே விரிசல் என்று சமீப காலங்களில் வந்த செய்திகள் இதனால் மீண்டும் ஒருமுறை பொய்யாகியுள்ளது. மேலும் நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் ஜாம்பவான்களாகவும் முன்னாள் இந்நாள் கேப்டன்களாக திகழும் இவர்கள் இப்படி நண்பர்களாக வெற்றியை கொண்டாடியதைப் பார்த்து இந்திய ரசிகர்கள் பூரித்துப் போய் “மனதை திருடிவிட்டாய்” படத்தில் அப்பா கேரக்டரில் நகைச்சுவை நாயகன் வடிவேலு கொடுக்கும் ரியாக்ஷனை கொடுத்து கொண்டாடி வருகிறார்கள்.



