இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 91வது வருடாந்திர கூட்டம் அக்டோபர் 18ஆம் தேதியன்று மும்பையில் நடைபெற்றது. அதில் சௌரவ் கங்குலி பதவிக்காலம் முடிந்து வெளியேறிய நிலையில் 36ஆவது புதிய தலைவராக முன்னாள் வீரர் ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்த கூட்டத்தின் முடிவில் வரும் 2023இல் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்காது என்று செயலாளர் ஜெய் ஷா அறிவித்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஏனெனில் ஏற்கனவே எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த 10 வருடங்களாக பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் மோதுவதை நிறுத்தியுள்ள இந்தியா ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதி வருகிறது.
மறுபுறம் ஒரு கட்டத்தில் இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் மொத்தமாக நடத்தப்பட்ட சர்வதேச போட்டிகளை கடுமையான போராட்டத்திற்குப் பின் சமீப காலங்களில் வெற்றிகரமாக நடத்தி வரும் பாகிஸ்தான் வாரியம் 2008க்குப்பின் வரலாற்றில் 2வது முறையாக 2023 ஆசிய கோப்பையை தங்களது நாட்டில் நடத்தும் உரிமையை பெரும்பாடுபட்டு வாங்கியுள்ளது. அந்த நிலையில் ஜெய் ஷா வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு அந்நாட்டு வாரியத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதே சமயம் விளையாட்டில் அரசியல் எதற்கு என இந்தியாவிலும் நிறைய சலசலப்புகள் எழுந்துள்ளன.
நாங்களும் பார்கிறோம்:
அத்துடன் சமீப காலங்களில் விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என பாபர் அசாம் போன்ற பாகிஸ்தான் வீரர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் ஷாஹீன் அப்ரிடி காயத்திலிருந்து குணமடைய வேண்டுமென விராட், ராகுல் போன்ற இந்திய வீரர்கள் வாழ்த்தினர். அப்படி வீரர்கள் கூட பகையை மறந்து நட்பு பாராட்டும் நிலையில் கிரிக்கெட் பற்றிய அனுபவமில்லாத ஜெய் ஷா இரு நாட்டுக்குமிடையே பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருக்கும் ஜெய் ஷா தங்களிடம் எதையும் கலந்தாலோசிக்காமல் 2023 ஆசிய கோப்பையில் பங்கேற்க தங்களது நாட்டுக்கு இந்தியா வராது என அறிவித்துள்ளது ஏமாற்றத்தை கொடுப்பதாக பாகிஸ்தான் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் அதே 2023 50 ஓவர் உலகக் கோப்பை உட்பட 2031 வரை இந்தியாவில் நடக்கும் எந்த ஐசிசி தொடரிலும் பாகிஸ்தானும் பங்கேற்காது என்று அதிரடியாக அறிவித்துள்ள அந்நாட்டு வாரியம் இது பற்றி விவாதிக்க ஆசிய கவுன்சிலின் அவசர கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இது பற்றி அந்நாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு.
“ஆசிய கவுன்சில் தலைவர் மிஸ்டர் ஜெய் ஷா அடுத்த வருடம் நடைபெறும் ஆசிய கோப்பையை பொதுவான இடத்தில் நடைபெறும் வகையில் மாற்றங்கள் செய்யப்படும் என நேற்று அறிவித்துள்ளதை பாகிஸ்தான் வாரியம் ஆச்சரியம் கலந்த ஏமாற்றத்துடன் குறித்துக் கொண்டுள்ளது. இந்த கருத்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் இருக்கும் உறுப்பினர்கள் மற்றும் பாகிஸ்தான் வாரியத்துடன் இணைந்து ஆலோசிக்காமல் வெளியிடப்பட்டுள்ளது நம்மிடையே இருக்கும் நீண்ட கால நட்பை பாதிக்கக் கூடியது”
“ஜெய் ஷா ஆசிய கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் ஆசிய நாடுகளின் ஆதரவுடன் ஆசிய கோப்பையை நடத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் மிஸ்டர் ஷா அவர்கள் ஒரு தலைப்பட்சமாக அறிக்கையில் கூறியுள்ளார். 1983 செப்டம்பரில் ஆசிய நாடுகளின் நலனை பாதுகாத்து ஆசியாவில் கிரிக்கெட்டை ஒழுங்கமைத்து மேம்படுத்த ஆசிய கவுன்சில் உருவாக்கப்பட்டது. ஆனால் அவருடைய இந்த கருத்து அந்த தத்துவத்திற்கு எதிராக அமைந்துள்ளது. மேலும் இது வரும் 2023இல் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலக கோப்பை மற்றும் 2024 – 2031 வரை இந்தியாவில் நடைபெறும் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் பங்கேற்பதிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது” என்று கூறியுள்ளது.
முன்னதாக இந்தியாவில் அடுத்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெறும் உலகக் கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் வகையில் வகையில் பாகிஸ்தானில் 2023 ஆசிய கோப்பையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் ஜெய் ஷா அறிவிப்பால் அந்த தொடரில் இந்தியா பங்கேற்காமல் போனால் அதற்கடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் தாங்கள் பங்கேற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது இரு நாட்டுக்குமிடையே இருக்கும் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



