இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதி வந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் 1 – 1 என சமனடைந்த இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி செப்டம்பர் 25ஆம் தேதியன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. அந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 186/7 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் கேமரூன் அதிரடியாக 7 பவுண்டரி 3 சிக்சருடன் 52 (21) ரன்கள் எடுக்க இறுதியில் டிம் டேவிட் 2 பவுண்டரி 4 சிக்சருடன் 54 (27) ரன்களும் டேனியல் சாம்ஸ் 28* (20) ரன்களும் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 187 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேஎல் ராகுல் 1, கேப்டன் ரோஹித் சர்மா 17 என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 30/2 என ஆரம்பத்திலேயே தடுமாறியது. இருப்பினும் அடுத்ததாக களமிறங்கி 14 ஓவர்கள் வரை ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறி 3வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 5 பவுண்டரி 5 சிக்சருடன் 69 (36) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் மறுபுறம் நிதானமாக செயல்பட்ட விராட் கோலி 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 63 (48) ரன்களை விளாசி கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
சூப்பர் வெற்றி:
இறுதியில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சருடன் 25* (16) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 19.5 ஓவரில் 187/4 ரன்களை எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. இதனால் சொந்த மண்ணில் எங்களை அவ்வளவு எளிதில் சாய்த்து விட முடியாது என்று உலக டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்று தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 அணி என்பதையும் நிரூபித்துள்ளது. இந்த வெற்றிக்கு 69 ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றாலும் பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளை எடுத்த அக்சர் பட்டேல் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார்.

சமீப காலங்களாகவே ஐபிஎல் தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு விளையாட போராடி வரும் அவர் சமீபத்திய ஆசிய கோப்பையில் நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா காயத்தால் விலகியதால் இந்த தொடரிலும் டி20 உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியிலும் தேர்வு செய்யப்பட்டார். அந்த நிலைமையில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் எஞ்சிய அனைத்து இந்திய பவுலர்களும் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கிய போது அவர் மட்டும் தனித்துவமாக 4 ஓவரில் வெறும் 4.25 என்ற துல்லியமான எக்கனாமியில் 17 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
மேலும் நாக்பூரில் 8 ஓவர்களாக நடைபெற்ற 2வது போட்டியிலும் மற்ற இந்திய பவுலர்கள் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் வழங்கிய நிலையில் இவர் மட்டும் 2 ஓவரில் 6.50 என்ற சிறப்பான எக்கனாமியில் பந்து வீசி 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அப்படி 3 போட்டியிலும் சேர்த்து ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை காட்டிலும் முதன்மைப் சுழல் பந்து வீச்சாளராக கருதப்படும் சஹாலை காட்டிலும் குறைவான எக்கனாமியில் பந்து வீசிய அவர் அதிகபட்சமாக 8 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒரு டி20 தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற பும்ரா – நடராஜன் ஆகியோரது சாதனையை தகர்த்த அவர் புதிய சாதனையை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. அக்சர் படேல் : 8* (2022இல்)
2. ஜஸ்பிரித் பும்ரா : 6 (2016இல்)
3. டி நடராஜன் : 6 (2020இல்)
இப்படி பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு வரும் அக்சர் பட்டேல் பேட்டிங்கில் ஏற்கனவே சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரின் ஒரு போட்டியில் கடைசி நேரத்தில் தனி ஒருவனாக அதிரடியாக செயல்பட்டு பெற்றுக் கொடுத்த வெற்றியை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. அந்த வகையில் ஜடேஜா காயத்தால் வெளியேறினாலும் அவரது இடத்தில் நான் இருக்கிறேன் என்ற வகையில் இந்தியாவுக்கு தெம்பு கொடுக்கும் அக்சர் படேலுக்கு டி20 உலகக் கோப்பையிலும் சிறப்பாக செயல்பட இந்திய ரசிகர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.



