இந்தியாவின் நட்சத்திர முன்னாள் வீரர் எம்எஸ் தோனி வரலாறு கண்ட மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் முக்கியமானவராக போற்றப்படுகிறார். 2004இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் அதிரடியான பேட்டிங், அபாரமான பினிஷிங், 3 விதமான உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என பல பரிணாமங்களை கொண்ட வீரராக இந்தியாவுக்கு ஏராளமான வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார். அப்படி பன்முகத் திறமை கொண்ட அவர் இந்திய கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்களின் அடிப்படை இலக்கணத்தை மாற்றியமைத்த பெருமைக்குரியவர் என்றே கூறலாம். ஏனெனில் அதிரடியாக விளையாடி நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டுமல்லாமல் அதிரடியாக பேட்டிங் செய்யக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார்.

அந்த வகையில் இந்திய விக்கெட் கீப்பர்களை தோனிக்கு முன் பின் என 2 வகையாக பிரிக்கலாம். அப்படி பேட்டிங்கில் புரட்சியை ஏற்படுத்திய அவர் விக்கெட் கீப்பிங் செய்வதிலும் இந்த உலகமே பாராத ஏராளமான நிறைய நுணுக்கங்களை பின்பற்றி புதிய பரிணாமத்தை ஏற்படுத்தினார். குறிப்பாக மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வது, பேட்ஸ்மேன்கள் காலை ஒரு சில இன்ச்க்கள் நகர்த்துவதையும் கூர்மையாக கவனித்து பெய்ல்ஸை நீக்குவது போன்ற அவருடைய நுணுக்கங்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
காப்பி அடிக்கல:
அத்துடன் பார்க்காமலேயே ஸ்டம்ப்பை சரியாக அடித்து ரன் அவுட் செய்வது, 2016 டி20 உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக கடைசி பந்தில் ரன் அவுட் செய்வதற்காக ஒற்றை கையுறையை கழற்றிய முன்னெச்சரிக்கை போன்ற அம்சங்கள் உலகில் இதர விக்கெட் கீப்பர்களை காட்டிலும் அவரை தனித்துவமாக அடையாளப்படுத்தியது. மேலும் 195 ஸ்டம்பிங்களை செய்து உலக சாதனை படைத்துள்ள அவர் ஆடம் கில்கிறிஸ்ட், குமார் சங்ககாரா போன்ற ஜாம்பவான் விக்கெட் கீப்பர்களைக் காட்டிலும் மிகச் சிறந்த விக்கெட் கீப்பராக போற்றப்படுகிறார்.

இருப்பினும் ஆரம்ப காலங்களில் இந்த ஸ்டைலைப் பின்பற்றி தடுமாறிய போது விக்கெட் கீப்பிங் செய்வதற்கான அடிப்படை விதிமுறை புத்தகத்தை பின்பற்றாமல் செயல்பட்டதால் நிறைய விமர்சனங்களை சந்தித்ததாக தெரிவிக்கும் எம்எஸ் தோனி முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோர் உதவியுடன் புத்தகத்தை காப்பியடிக்காமல் தன்னுடைய இயற்கையான ஸ்டைலைப் பின்பற்றியதையே தன்னுடைய தனித்துவமான விக்கெட் கீப்பிங்கின் ரகசியம் என்று கூறியுள்ளார். இதுபற்றி சமீபத்திய நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. ” நானும் முதலில் டென்னிஸ் பந்துகளை கொண்ட கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கினேன். அந்தப் பந்துகளில் நீங்கள் விக்கெட் கீப்பிங் செய்யும் போது உங்களது கைகளை மிருதுவாக பயன்படுத்த வேண்டும்”
“மாறாக கைகளை கடினமாக பயன்படுத்தினால் பந்து தவறிப்போய் விடும். எனவே அவை அனைத்தும் அங்கு தொடங்கியதால் நாளடைவில் லெதர் பந்துகளில் கீப்பிங் செய்யும்போது எனக்கு நிறைய உதவி கிடைத்தது. மேலும் ஆரம்ப காலங்களில் தேர்வுக்குழு தலைவராக இருந்த கிரண் மோர் எங்களது அணியுடன் இருக்கும் போது விக்கெட் கீப்பிங் மற்றும் அடிப்பதில் எனக்கு உதவி செய்தார். அதைவிட என்னுடைய தனித்துவமான விக்கெட் கீப்பிங் டெக்னிக்கை அவர் புரிந்து கொண்டது எனக்கு மிகவும் பிடித்தது. அது புத்தகத்தை பார்த்து காப்பியடிக்கும் ஸ்டைல் கிடையாது”

“எனவே புத்தகத்தை காப்பி அடிப்பதை மறந்துவிட்டு உங்களது ஸ்டைலில் விளையாடுங்கள் என்று அவர் (மோர்) கூறினார். ஏனெனில் எதை பின்பற்றுகிறோம் என்பதைவிட போட்டியில் எந்த ஒரு பந்தையும் தவறவிடக்கூடாது என்பதே முக்கியம். உங்களிடம் சற்று வித்தியாசமான டெக்னிக் இருக்கலாம். இருப்பினும் நிமிட வித்தியாசத்தைத் தவிர பெரிய மாற்றம் இருக்காது. அதனால் ஒரு முறை உங்களது நுணுக்கம் மீது உங்களுக்கு தன்னம்பிக்கை வந்து விட்டால் உங்களது சோதனைகளை நீங்கள் தைரியமாக செய்யலாம். அதன் காரணமாக உங்களுக்கு அணியின் வெற்றிக்கு நீங்கள் சற்று வித்தியாசமாக உதவலாம்”
“மேலும் கடந்த 50 வருடங்களில் அனைத்து விக்கெட் கீப்பர்களும் ஒரே அணுகு முறையை தான் கடைபிடித்தனர் என்பது எனக்கு பாடமாக அமைந்தது. அதிலும் பந்து வரும்போது அதை பிடிக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என வல்லுநர்கள் கூறினார்கள். ஆனால் ரப்பர் கையுறைகளையும் அதற்கு உள்ளே பஞ்சு கையுறைகளை அணிந்திருக்கும் நீங்கள் எதற்காக பந்து வரும்வரை காத்திருக்க வேண்டும். மாறாக வரும் பந்தை நீங்கள் பறிக்க வேண்டும்” என்று கூறினார்.



