IND vs AUS : பேசாமல் உங்களை நீங்களே அங்க ட்ராப் பண்ணுங்க – ரோஹித் சர்மாவுக்கு முன்னாள் பாக் வீரர் ஆலோசனை

Rohit Sharma IND
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் பின்தங்கியுள்ளது. மொகாலியில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியான் பேட்டிங்கை வெளிப்படுத்தி 208/6 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 55 (35) ரன்களும் சூர்யகுமார் யாதவ் 46 (25) ரன்களும் ஹர்திக் பாண்டியா 71* (30) ரன்களும் அதிரடியாக எடுத்தனர். அதை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்க வீரர் கேமரூன் கிரீன் அதிரடியாக 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 61 (30) ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்து அவுட்டானார்.

அதை வீணடிக்காத வகையில் கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய மேத்யூ வேட் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 45* (21) ரன்கள் குவித்து பினிஷிங் செய்து வெற்றி பெற வைத்தார். அதனால் ஆரம்பத்திலேயே வென்று தன்னை டி20 உலக சாம்பியன் என்று நிரூபித்துள்ள ஆஸ்திரேலியா இந்தியாவை தலை குனிய வைத்துள்ளது. மறுபுறம் நம்பர் ஒன் டி20 அணியாக இருந்தும் சொந்த மண்ணில் மண்ணை கவ்விய இந்தியா இத்தொடரை வென்று ரசிகர்களுக்கு முன்னிலையில் தலை நிமிர எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இப்போட்டியில் பேட்டிங்கில் அசத்தினாலும் மோசமான பந்து வீச்சு காரணமாக தோல்வி கிடைத்த நிலையில் இந்திய பவுலர்களை சரியாகப் பயன்படுத்தாத ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

சொதப்பும் ரோஹித்:
குறிப்பாக சொதப்புவார் என தெரிந்தும் புவனேஸ்வர் குமாரை மீண்டும் மீண்டும் 19வது ஓவரில் பயன்படுத்தும் அவர் பேட்டிங்கில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் அதிரடியாக 11 (9) ரன்களை எடுத்து நல்ல தொடக்கத்தை பெற்றாலும் வழக்கம் போல சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். ஒரு காலத்தில் ஹிட்மேன் என ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு தொடக்க வீரராக பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பிய அவர் சமீப காலங்களில் கேப்டன்ஷிப் அழுத்தத்தால் பெரிய ரன்களை குவிக்க தடுமாறுவதாக நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.

KL Rahul Virat Kohli Matthew Wade Hardik Pandya

இந்நிலையில் அதிரடியான தொடக்கத்தை கொடுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் பெரும்பாலான போட்டிகளில் தடுமாறும் ரோகித் சர்மா ஏன் 3வது இடத்தில் களமிறங்கி ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலியை தொடக்க வீரராக களமிறக்குவது பற்றி யோசிக்கக் கூடாது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“ரோகித் சர்மா தேவையான ரன்கள் அடிப்பதில்லை. அதை நாம் ஆசிய கோப்பையிலும் பார்த்தோம். நல்ல தொடக்கத்தை பெறும் அவர் அதை பெரிய ரன்களாக மாற்ற முடியாமல் தடுமாறுகிறார். எனவே அவர் தன்னைத் தானே 3வது இடத்தில் டிராப் செய்து கொண்டு விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்குவதை பற்றி யோசிக்க வேண்டும். அல்லது ராகுலை 3வது இடத்தில் களமிறக்கி விராட் – ரோகித் ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்குவதை பற்றி இந்தியா யோசிக்க வேண்டும்” என்று கூறினார்.

Danish-Kaneria-and-Rohit

இருப்பினும் ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்க பிறந்தவர் என்பது போல் கடந்த பல வருடங்களாக சிறப்பாக செயல்பட்டுள்ளதால் அவருடைய இந்த கருத்தை நிறைய இந்திய ரசிகர்கள் வரவேற்பதாக தெரியவில்லை. அதே போல் ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் மிட் ஆன் திசையில் தேவையற்ற ஷாட் அடித்து வெறும் 2 ரன்களில் அவுட்டானதாக தெரிவிக்கும் டேனிஷ் கனேரியா இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

“விராட் கோலியின் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது மைதானத்தில் இருந்த அத்தனை ரசிகர்களும் எழுந்து நின்று வரவேற்பு கொடுத்தனர். ஆனால் அவர்களை ஏமாற்றும் வகையில் அவர் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். போட்டியில் அந்த சமயத்தில் அந்த ஷாட் அடிப்பதற்கு தேவையில்லாமல் இருந்தது. மாறாக அது போன்ற ஷாட்டுகளை அடிப்பதற்கு முன்பாக அவர் இன்னும் சற்று அதிகப்படியான நேரத்தை எடுத்து செட்டிலாகியிருக்க வேண்டும். ஏனெனில் பேட்டிங்க்கு சாதகமாக இருந்த மொஹாலி பிட்ச்சில் முதலில் அவர் தன்னை உட்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement