வரலாற்றில் 15வது முறையாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெறும் கையுடன் நாடு திரும்பியுள்ளது. இத்தனைக்கும் கடந்த டி20 உலக கோப்பைக்கு பின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் இதுவரை பங்கேற்ற சாதாரண இருதரப்பு தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு தோல்வியடையாமல் வெற்றி நடை போட்ட இந்தியா உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இதர ஆசிய அணிகளை காட்டிலும் வலுவான அணியாக களமிறங்கியதால் எளிதாக கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் 6 அணிகள் பங்கேற்ற இந்த பெரிய தொடரில் வழக்கம்போல லீக் சுற்றில் அசத்திய இந்தியா அழுத்தமான சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வெளியேறியது. முக்கிய வீரர்களின் சொதப்பலான ஆட்டம், தவறான அணி தேர்வு, தேர்வு செய்த வீரர்களையும் சரியாக பயன்படுத்தாதது, சுமாரான கேப்டன்ஷிப் என அணி நிர்வாகமும் கேப்டனும் நிகழ்த்திய ஏராளமான குளறுபடிகள் இந்த தோல்விக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஐபிஎல் 2022 தொடரில் அதிரடியாக செயல்பட்டு 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த தினேஷ் கார்த்திக் அதன்பின் நடந்த தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு நல்ல பார்மில் இருந்த போதிலும் இந்த ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் வெறும் ஒரு பந்தை மட்டுமே சந்தித்திருந்த நிலையில் சம்மந்தமின்றி சூப்பர் 4 சுற்றில் அதிரடியாக நீக்கப்பட்டது தோல்விக்கு பெரிய காரணமாக அமைந்தது.
காலம் கடந்து:
ஏனெனில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் தோல்வியடைந்ததற்கு இந்தியா 15 – 20 ரன்களை குறைவாக எடுத்திருந்ததாக கேப்டன் உட்பட அனைவருமே ஒப்புக்கொண்டனர். ஆனால் தற்போது நல்ல பார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக் அந்த ரன்களை கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக எடுக்க கூடியவர் என்ற நிலைமையில் அவரை நம்பாத அணி நிர்வாகம் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பளித்தது.
அதில் வழக்கம் போல அவர் சொதப்பிய நிலையில் ஜடேஜாவுக்கு பதில் தேர்வு செய்யப்பட்ட தீபக் ஹூடாவுக்கு ஒரு ஓவர் கூட பந்து வீச வாய்ப்பு வழங்காத ரோஹித் சர்மா பேட்டிங்கில் தினேஷ் கார்த்திக் களமிறங்கக் கூடிய 6, 7 ஆகிய இடங்களில் களமிறங்கும் வாய்ப்பைக் கொடுத்து அவரது ஆட்டத்தையும் இந்தியாவின் வெற்றியையும் தாரை வார்த்தார். அந்த நிலைமையில் வீட்டுக்கு கிளம்புவதற்கு முன்பாக இந்த தொடரில் கடைசியாக ஆப்கானிஸ்தானை சந்தித்த இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட ஆறுதல் வெற்றி கண்டது.
அப்போட்டியில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி யாருமே எதிர்பாராத வகையில் அற்புதமாக பேட்டிங் செய்து டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து 122* (61) ரன்களை விளாசி 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக தினந்தோறும் சந்தித்த விமர்சனங்களை அடித்து நொறுக்கினார். அந்த போட்டியில் காலம் கடந்து வாய்ப்பை பெற்ற தினேஷ் கார்த்திக் விராட் கோலியின் அதிரடியால் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெறவில்லை.
முதல் முறையாக:
இருப்பினும் 213 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 119 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஆச்சரியப்படும் வகையில் தினேஷ் கார்த்திக்கை பந்து வீச கேப்டன் கேஎல் ராகுல் அழைத்தார். அதில் கேரியரில் முதல் முறையாக பந்து வீசிய அவர் 2, 6, 6, 2, 2, 0 என 2 சிக்ஸர்கள் உட்பட 18 ரன்களை வழங்கினார்.
அதை பார்த்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் போட்டி கட்டுக்குள் இருக்கிறது எவ்வளவு ரன்கள் வேண்டுமானாலும் கொடுங்கள் என்று கிண்டலடித்தார். ஆனால் கடந்த 2004 முதல் இந்தியாவுக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் தன்னுடைய கேரியரில் முதல் முறையாக இந்தப் போட்டியில் பந்து வீசியது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. ஏனெனில் இதற்கு முன் 26 டெஸ்ட், 94 ஒருநாள், 50 டி20 என மொத்தம் 170 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ள அவர் பெரும்பாலும் விக்கெட் கீப்பராக விளையாடுவதால் ஒருமுறை கூட பந்து வீசியதில்லை. அந்த வகையில் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட பந்து வீசாத அவர் முதல் முறையாக நேற்று பந்து வீசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



