ஐக்கிய அரபு நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2022 தொடரில் நடப்பு சாம்பியனான விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா பரம எதிரியான பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகளுக்கு எதிரான 2 லீக் போட்டிகளிலும் வென்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து செப்டம்பர் 4ஆம் தேதியன்று மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் துபாயில் மோதவுள்ளதால் மீண்டும் அனைவரிடமும் அதிகப்படியான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை போட்டியாக கருதாமல் கௌரவமாக நினைத்து வெற்றியை பெற்றே தீர வேண்டும் என்ற வெறியுடன் போராடுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும்.
அதனாலேயே பரம எதிரிகள் என்ற பெயருடன் இவ்விரு அணிகளும் மோதும் போட்டிகளுக்கு தனி மதிப்பும் மவுசும் உள்ள நிலையில் அதில் வெற்றி பெறுவதற்கு இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் களத்திலும் களத்திற்கு வெளியேயும் கலாய்ப்பது முதல் கைகலப்பில் ஈடுபடுவது வரை எந்த எல்லையையும் தொடுவதற்கு தயங்க மாட்டார்கள். அந்த வகையில் இந்தியா – பாகிஸ்தான் மோதல்களில் களத்திற்கு வெளியே பேட்டிகள், சமூக வலைதளங்களில் மோதிக்கொண்ட 5 சுவாரஸ்யமான தருணங்களை பற்றி பார்ப்போம்:
5. பாகிஸ்தான் ஸ்பின்னர்கள்: இந்தியாவின் நட்சத்திர அதிரடி முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் எப்போதுமே பாகிஸ்தானுக்கு எதிராக இரு மடங்கு சிறப்பாக செயல்படுவார். அந்த நிலைமையில் 2019இல் 60 வருடங்களாக உழைக்கும் மேஜை நாற்காலியை மையப்படுத்திய விளம்பரத்தை தனது டுவிட்டரில் பதிவிட்ட அவர் நானே 14 – 15 வருடங்கள்தான் சுழல் பந்துவீச்சாளர்களை இறுக்கமாக பிடித்திருந்தேன். ஆனால் இது 60 வருடங்கள் பிடித்திருக்கிறது என்று வழக்கம் போல ஜாலியாக பதிவிட்டிருந்தார்.
அதை பார்த்த மற்றொரு இந்திய வீரர் ஹர்பஜன் சிங் பாகிஸ்தான் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நீங்கள் 91 என்ற அற்புதமான சராசரியை வைத்துள்ளீர்கள். ஆனால் உலகின் அனைத்து சுழல் பந்து வீச்சாளர்களும் பாகிஸ்தானியர்கள் கிடையாது என்று பாகிஸ்தானை கலாய்த்தார்.
4. சிக்கிய ஹர்பஜன்: கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் வழக்கம்போல இந்தியா வெற்றி பெறும் என்று காலரை தூக்கிவிட்டு பேசிய முன்னாள் இந்திய வீரர்களுக்கு மத்தியில் ஒருவரான ஹர்பஜன்சிங் அப்போட்டிக்கு முன்பாக பாகிஸ்தானை இந்தியா எளிதாக தோற்கடிக்கும் என்று கூறினார்.
ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற பின் குறைத்து மதிப்பிட்ட ஹர்பஜன் சிங்கை வேண்டுமென்றே கலாய்க்கும் வகையில் தனியாக வீடியோ பதிவிட்ட சோயப் அக்தர் “ஹர்பஜன்சிங் உங்களுக்கு நடைபயணம் வேண்டுமா அல்லது வேண்டாமா? சரி என்ன செய்வது” என்று கூறினார்.
3. ஆகாஷ் சோப்ரா: முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா களத்தில் சுமாராக செயல்பட்டு தற்போது வர்ணனையாளராக செயல்படும் போது அதிகப்படியாக பேசுவதால் நிறைய ரசிகர்கள் அவர்மீது எப்போதுமே அதிருப்தியில் உள்ளது வழக்கமாகும். அந்த வகையில் கடந்த 2021 ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி வரை கொல்கத்தா செல்வதற்கு 2வது பகுதியில் முக்கிய பங்காற்றிய வெங்கடேஷ் ஐயர் பற்றி ஐபிஎல் முடிந்த பின்பும் அவர் பேசியிருந்தார்.
அதனால் கடுப்பான ஒரு பாகிஸ்தான் ரசிகர் ஐபிஎல் தான் முடிந்து விட்டதே இனிமேல் அதை நிறுத்திவிட்டு உலக கோப்பையை பற்றி பேசுமாறு வம்பிழுத்தார். அதற்கு பதிலளித்த ஆகாஷ் சோப்ரா “டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை இந்தியா 5 முறை தோற்கடித்துள்ளது. உலக கோப்பையை பற்றிய இந்த பேச்சு போதுமா?” என்று நெத்தியடி பதிலடி கொடுத்தார்.
2. வெறியான ரசிகர்: பொதுவாகவே இந்தியா பாகிஸ்தான் போட்டிகளில் பெரும்பாலான தருணங்களில் ஆரம்பத்திலேயே இந்தியாவை மட்டம் தட்டும் வகையில் பேசி விட்டு பின்பு தோல்வியை சந்திக்கும்போது பாகிஸ்தான் ரசிகர்கள் மழுப்புவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் கடந்த 2019 உலகக்கோப்பையில் இந்தியாவை நிச்சயம் பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்று நம்பிய அந்நாட்டு ரசிகர்களில் ஒருவர் வழக்கம்போல தோற்றபின் மைதானத்துக்கு வெளியே சோகத்துடன் வந்துகொண்டிருந்தார்.
அப்போது அவரை பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு யூடியூப் நபர் இந்த தோல்வியை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று பேட்டி எடுத்தபோது “ஓ பாய், என்ன அடிங்க என்ன அடிங்க” என்று கூறி பிட்னெஸ் இல்லாமல் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் வீரர்களை வெளுத்து வாங்கியதை இப்போதும் இந்திய ரசிகர்கள் பார்த்தால் சிரிப்பார்கள்.
1. அப்பன் அப்பனே: இந்தியாவிலிருந்து பிரிந்து சென்று நாடு பாகிஸ்தான் என்ற நிலைமையில் 2003 உலகக்கோப்பையில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சோயப் அக்தர் போன்ற பவுலர்களை வெளுத்து வாங்கிய சச்சின் சதத்தை தவறவிட்டாலும் இந்தியாவை வெற்றி பெற வைத்ததை மறக்க முடியாது. அப்போட்டியில் அவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய தம்மிடம் வம்பிழுத்த பாகிஸ்தானின் சோயப் அக்தரிடம் “என்னிடம் பேசாமல் எதிர்ப்புறம் நிற்கும் உங்களது அப்பனிடம் (சச்சின்) இதை சொல்லுங்கள், அவர் ஹூக் ஷாட் அடிப்பார்” என்று கூறியதாக நாளடைவில் நிகழ்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடம் விரேந்திர சேவாக் கூறினார்.
அடுத்த சில பந்துகளிலேயே சோயப் அக்தர் வீசிய பந்தை யாருமே மறக்க முடியாத சிக்ஸராக சச்சின் டெண்டுல்கர் பறக்க விட்ட போது “அப்பன் எப்பவும் அப்பன்தான், மகன் என்றும் மகன்தான்” என்று மீண்டும் அக்தருக்கு பதிலடி கொடுத்ததாக அதே மேடையில் வீரேந்திர சேவாக் தெரிவித்தது அதைப் பார்த்த சச்சின் உட்பட அனைவரிடமும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இருப்பினும் சமீபத்திய பேட்டியில் வீரேந்திர சேவாக் அவ்வாறு கூறவில்லை என்றும் அவ்வாறு கூறியிருந்தால் அந்த இடத்திலேயே அவரை அடித்திருப்பேன் என்றும் சோயப் அக்தர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



