IND vs PAK : கடைசி வரை சரிக்கு சமமாக அனல் பறந்த போட்டி – கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி பெற்று பழி தீர்த்தது எப்படி

Hardik Padnday IND vs PAk
- Advertisement -

வரலாற்றுச் சிறப்புமிக்க 2022 ஆசிய கோப்பையில் ஒட்டுமொத்த உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துவங்கியது. கடந்த வருடம் இதே மைதானத்தில் உலக கோப்பையில் முதல் முறையாக வரலாற்று தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பதற்காக டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு கடந்த முறை 152 ரன்களை அசால்டாக விக்கெட்டே விடாமல் சேசிங் செய்து தோல்வியை பரிசளித்த ஓப்பனிங் ஜோடியில் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் முதுகெலும்பான கேப்டன் பாபர் அசாமை 2 பவுண்டரியுடன் 10 (9) ரன்களில் புவனேஸ்வர் குமார் அவுட்டாக்கினார்.

அதனால் சுமாரான தொடக்கத்தைப் பெற்ற அந்த அணிக்கு அடுத்து களமிறங்கிய பகார் ஜமான் 10 (6) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அடுத்து வந்து அதிரடி காட்டிய இப்திகார் அகமத் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 28 (22) ரன்களில் பாண்டியாவிடம் சிக்கினார். அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் 4 பவுண்டரி 1 சிக்சருடன் போராடிக் கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் முகமது ரிஸ்வானை 43 (42) ரன்களில் காலி செய்த பாண்டியா அடுத்து வந்த குஷ்தில் ஷா’வையும் 2 (7) ரன்களில் அவுட்டாக்கி பாகிஸ்தானை இந்தியாவின் கட்டுக்குள் கொண்டு வந்தார்.

- Advertisement -

அசத்தல் பவுலிங்:
அப்போது அடுத்தடுத்து ஓவர்களில் ஆசிப் அலி 9 (7) முகமத் நவாஸ் 1 (3) என லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் 114/7 என தடுமாறிய பாகிஸ்தானுக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சடாப் கான் 10 (9) ரன்களில் ஆட்டமிழந்து மேலும் பின்னடைவை கொடுத்தார். இறுதியில் ஹாரீஸ் ரவூப் அதிரடியாக 13* (7) ரன்களும் தஹானி 16 (6) ரன்கள் எடுத்த போதிலும் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அற்புதமாக பந்து வீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 148 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு 2வது பந்திலேயே நம்பிக்கை நட்சத்திரம் கேஎல் ராகுல் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 0/1 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவுக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா – விராட் கோலி ஆகியோர் 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரிசெய்ய போராடினார்கள்.

- Advertisement -

போராடிய இந்தியா:
8 ஓவர்கள் வரை நீடித்த இந்த ஜோடியில் ரோகித் சர்மா 12 (18) ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களிலேயே நம்பிக்கை காட்டிய விராட் கோலியும் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 35 (34) ரன்களில் அவுட்டானார். அதனால் 53/3 என மீண்டும் தடுமாறிய இந்தியாவுக்கு மிடில் ஆர்டரில் ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பை காட்டிய சூர்யகுமார் யாதவ் 1 பவுண்டரியுடன் 18 (18) ரன்களில் அதிரடியை துவக்குவதற்கு முன்பாக அவுட்டானார். அதனால் 14.2 ஓவரில் 89/4 என தடுமாறிய இந்தியாவுக்கு ஒருபுறம் ஜடேஜா நிற்க அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா அதிரடியை துவக்கியதால் கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது அவசரப்பட்டால் வேலைக்கு ஆகாது என்ற வகையில் பொறுமையை காட்டிய அவர்கள் 17, 18 ஆகிய ஓவர்களில் தலா 10 ரன்கள் எடுத்ததால் கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நிலைமையில் ஹாரீஸ் ரவூப் வீசிய 19வது ஓவரில் 3, 4 ஆகிய பந்துகளில் அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா கடைசி பந்திலும் பவுண்டரியை பறக்க விட்டு இந்திய ரசிகர்களை நிம்மதியடைய வைத்தார்.

- Advertisement -

பழிக்கு பழி:
அதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்திலேயே 2 பவுண்டரி 2 சிக்சருடன் 39 (29) ரன்கள் எடுத்து போராடி கொண்டிருந்த ஜடேஜா கிளீன் போல்டானதால் போட்டியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் பொறுப்பாக சிங்கிள் எடுக்க 3வது பந்தில் ரன் எடுக்காத ஹர்திக் பாண்டியா 4-வது பந்தில் மெகா சிக்ஸரை பறக்க விட்டு 19.4 ஓவரில் 148/5 ரன்கள் எடுக்க வைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

இப்போட்டியில் ஆரம்பத்திலேயே ஷார்ட் பிட்ச் பந்துகளை கச்சிதமாக பயன்படுத்திய இந்தியா பாகிஸ்தானின் முதல் 5 விக்கெட்டுகளை விரைவாக எடுத்து 150 ரன்களை தொட விடாமல் 50% வெற்றியை பெற்றது. அதன்பின் அறிமுகப் போட்டியில் களமிறங்கிய பாகிஸ்தானில் நசீம் சா 2 முக்கிய விக்கெட்டுகளும் முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளையும் எடுத்து மிரட்டினாலும் ராகுல், ரோஹித் ஆகியோர் ஏமாற்றினாலும் மிடில் ஆர்டரில் பாகிஸ்தானை எப்போதுமே அடிக்கக்கூடிய விராட் கோலி முக்கியமான 35 ரன்கள் எடுத்தார்.

ஆனாலும் தடுமாறிய இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் முக்கியமான 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஆல்-ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகியோர் தான் இரு அணிகளுக்கு இடையேயான வெற்றியை தீர்மானித்து இந்தியாவின் தலை நிமிர வைத்தனர். அத்துடன் டாஸ் அதிர்ஷ்டமும் இந்தியாவின் பக்கம் இருந்தது. இந்த அற்புதமான வெற்றியால் 2021 டி20 உலகக்கோப்பையில் தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானை பழிதீர்த்த நடப்புச் சாம்பியன் இந்தியா இந்த ஆசிய கோப்பையை வெற்றிகரமாக துவக்கியுள்ளது.

Advertisement