இந்தியா – பாக் போட்டியிலும் ஆசிய கோப்பையிலும் வெல்லப்போவது யார் – ரிக்கி பாண்டிங் கணிப்பு இதோ

Asia Cup
- Advertisement -

ஆசியக் கண்டத்தின் கிரிக்கெட் சாம்பியனை தீர்மானிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை 2022 தொடர் வரும் ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. வரலாற்றில் 15வது முறையாக நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய கண்டத்தின் டாப் 6 அணிகள் மோத உள்ளன. அந்த 6 அணிகளும் குரூப் ஏ மற்றும் பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோத உள்ளன. அதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதி அதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற உள்ளன.

Asia-Cup

இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா சார்பில் ரோகித் சர்மா தலைமையில் கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டியா, அரஷ்தீப் சிங் போன்ற அனுபவமும் இளமையும் கலந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி இந்தியா தனது முதல் போட்டியில் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று பரம எதிரியான பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது.

வலுவான இந்தியா:
கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லைப் பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை நிறுத்திவிட்டு இதுபோல் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதுவதால் இப்போதெல்லாம் இவ்விரு அணிகள் மோதும் போட்டிக்கு உலக அளவில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதனால் இப்போட்டிக்கு அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் கடைசியாக கடந்த 2021 டி20 உலகக்கோப்பையில் இதே துபாய் மண்ணில் இவ்விரு அணிகளும் மோதிய போது விராட் கோலி தலைமையிலான இந்தியாவை உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக மண்ணைக் கவ்வ வைத்த பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் சரித்திரத்தை மாற்றி எழுதியது.

INDvsPAK

அதனால் அவமான தோல்வியை சந்தித்துள்ள இந்தியா இம்முறை கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற 14 ஆசிய கோப்பைகளில் 50% என்ற அளவுக்கு 7 கோப்பைகளை வென்றுள்ள இந்தியா வெற்றிகரமான அணியாகவும் கடந்த 2018இல் இதே துபாயில் நடைபெற்ற 50 ஓவர் ஆசிய கோப்பை பைனலில் வங்கதேசத்தில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

பாண்டிங் கணிப்பு:
அதனால் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் இந்தியா இம்முறையும் எஞ்சிய அணிகளை தோற்கடித்து ஆசிய சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி எஞ்சிய அணிகளை காட்டிலும் வலுவான அணியாக திகழும் இந்தியா இம்முறை பாகிஸ்தானை தோற்கடித்து ஆசிய கோப்பையை கைப்பற்றும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இதுபற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

Ponting

“ஆசிய கோப்பை மட்டுமல்லாது அடுத்ததாக நடைபெறும் டி20 உலகக் கோப்பையிலும் இந்தியாவை எளிதாக கடந்து செல்வது கடினமானது என்று நினைக்கிறேன். அங்கே இந்தியா சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். மற்ற அணிகளை விட இந்திய அணியின் திறமையின் ஆழம் சிறப்பாக இருப்பதால் அவர்கள் இந்த ஆசிய கோப்பையை வெல்வார்கள் என்று நினைக்கிறேன். அதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராகவும் இந்தியா வெல்லும் என்று நான் ஆதரவளிக்கிறேன். அதற்காக பாகிஸ்தானுக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை. ஏனெனில் அவர்கள் ஒரு நம்பமுடியாத கிரிக்கெட் தேசம், அவர்களும் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் வீரர்களை உருவாக்கி வழங்கிக் கொண்டு வருகிறார்கள்” என்று கூறினார்.

ஆஷஸ்க்கு நிகரானது:
மேலும் வெற்றி என்பதை விட கௌரவத்துக்காக இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதிக்கொள்ளும் ஆஷஸ் தொடருக்கு நிகராக இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டிகள் சுவாரசியமும் தரத்துடனும் இருப்பதாக தெரிவிக்கும் ரிக்கி பாண்டிங் இவ்விரு அணிகள் டெஸ்ட் போட்டிகளிலும் மோத வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “உண்மையை சொல்ல வேண்டுமெனில் கடந்த 15 – 20 வருடங்களை திரும்பிப் பார்க்கும்போது இதுபோன்ற போட்டிகளுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். கிரிக்கெட் ரசித்து பார்ப்பவராக இதுபோன்ற போட்டி மிகுந்த விளையாட்டுகளை மகிழ்ச்சியுடன் அமர்ந்து பார்ப்பது மிகவும் நல்ல உணர்வாகும். ஏனெனில் இதில் எல்லாம் ஒரு படி மேலே செல்கிறது இல்லையா?”

INDvsPAK

“போட்டிகளைப் பற்றி நான் நினைக்கும்போது ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடர் அதன் உச்சம் என்று நான் நினைப்பேன். இந்தியாவும் பாகிஸ்தானியர்களும் அதை பற்றி ஒரே மாதிரியாக சொல்வார்கள் என்று நான் நம்புகிறேன். உண்மையான போட்டி இவ்விரு நாடுகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோதும்போது உச்சமாக இருக்கும் என்று நினைக்கிறேன்” எனக்கூறினார்.

Advertisement