ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அங்கு அந்த அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் 1 – 1* என்ற கணக்கில் தொடர் சமநிலை அடைந்தது. அதனால் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3-வது போட்டியை தலைநகர் ஹராரேயில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 156/8 ரன்கள் எடுத்தது.
அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் சக்கப்வா 17 (10) கிரைக் எர்வின் 24 (27) என குறைவான ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த வந்த மதேவரே 5 (8) ரன்களிலும் சிக்கந்தர் ராசா கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். போதாகுறைக்கு அடுத்து வந்த சீன் வில்லியம்ஸ் 2 (8) மில்டன் சும்பா 4 (11) என முக்கியமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி கைவிட்டனர். அதனால் 67/6 என திணறிய அந்த அணி 100 ரன்களை தாண்டுமா என்ற சந்தேகம் எழுந்த போது கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த ரியன் புர்ள் – லுக் ஜோங்வே ஆகியோர் சரமாரியாக பவுண்டரிகளை அடித்தனர்.
ஒரே ஓவரில் 34:
குறிப்பாக நசும் அஹ்மத் வீசிய 15-வது ஓவரில் 6, 6, 6, 6, 4, 6 என 34 ரன்களை தெறிக்கவிட்ட ரியன் புர்ள் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் எடுத்த 3-வது பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனையை யுவராஜ் சிங் மற்றும் கைரன் பொல்லார்ட் (தலா 36 ரன்கள்) ஆகியோருக்குப் பின் படைத்தார். ஒட்டுமொத்தமாக 2 பவுண்டரி 6 சிக்சருடன் அரைசதம் விளாசிய அவர் 54 (28) ரன்களும் ஜோங்வே 35 (20) ரன்களும் எடுத்து பினிசிங் கொடுத்து தங்களது அணியை காப்பாற்றினர். வங்கதேசத்தின் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக மெஹந்தி ஹாசன் மற்றும் ஹசன் முகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
அதை தொடர்ந்து 157 ரன்களை துரத்திய வங்கதேசத்திற்கு லிட்டன் தாஸ் 13 (6) ஹொசைன் ஏமோன் 2 (6) அனமுள் ஹேக் 14 (13) சாண்டோ 16 (20) மகமதுல்லா 27 (27) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் பெரிய ரன்களை எடுக்காமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தனர். அதனால் கடைசியில் மெஹதி ஹசன் அதிரடியாக 22 (17) ரன்களும் அஃபிப் ஹொசைன் 39 (27) ரன்களும் எடுத்து போராடிய போதிலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வங்கதேசம் 146/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஜிம்பாப்வே அசத்தல்:
அந்த அளவுக்கு அந்த அணியை மடக்கி பிடிக்கும் வகையில் அற்புதமாக பந்துவீசிய ஜிம்பாப்வே சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக விக்டர் நியாச்சி 3 விக்கெட்களையும் ப்ராட் இவஸ் 2 விக்கெட்டுக்களையும் எடுத்தனர். அதனால் வெறும் 10 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்த ஜிம்பாப்வே சொந்த மண்ணில் 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் காலரை கெத்தாக தூக்கிவிட்டு கோப்பையை முத்தமிட்டது.
சமீப காலங்களில் பொருளாதார அடிப்படையிலும் கிரிக்கெட் வாரியத்திலும் நிறைய குளறுபடிகளை சந்தித்த ஜிம்பாப்வேவுக்கு இந்த வெற்றி மிகப் பெரிய உத்வேகமாக அமைந்தது. சந்தேகமின்றி இந்த வெற்றிக்கு 54 ரன்கள் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்த ரியான் புர்ள் ஆட்ட நாயகனாகவும் இந்த தொடர் முழுவதும் அசத்திய சிகந்தர் ராசா தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர். மொத்தத்தில் இந்த 2 கத்துக்குட்டிகளுக்கு இடையே நடந்த போட்டியில் சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்ட ஜிம்பாப்வே வெற்றி பெற தகுதியான அணியாக கோப்பையை வென்றது.
கதறும் வங்கதேசம்:
ஆனால் ஜிம்பாப்வேயை விட வெற்றி பெறுவதற்கு நாங்கள் தகுதியான அணி என்று தெரிவிக்கும் வங்கதேசம் இந்த தோல்வியை அவமானமாக நினைப்பதாக தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த அணியின் இயக்குனர் கலீட் மஹ்முட் பேசியுள்ளது பின்வருமாறு. “ஜிம்பாப்வேயிடம் தோற்போம் என்று நினைக்கவே இல்லை என்பதால் மிகவும் நான் மிகவும் ஏமாற்றடைந்துள்ளேன். நாங்கள் அவர்களை விட சிறந்த அணியாவோம். இதை நான் அவமானமாக கருதுகிறேன். இதற்காக யாரையும் குறை சொல்லவில்லை. இருப்பினும் இந்த டி20 தொடரை நாங்கள் வென்றிருக்க வேண்டும்”
“அதிலும் கடைசி ஓவரில் 10 அல்லது 12 ரன்கள் தேவைப்படும் போது யாருமே சிக்ஸர் அடிக்க முயற்சி எடுக்கவில்லை. எங்களது அணியில் இருப்பவர்கள் சிங்கிள் மற்றும் டபுள் எடுக்க முயற்சித்தனர். இது என்ன விளையாட்டு? எங்களது அணி வீரர்கள் வெற்றி பெறுவதற்கு பதிலாக அணியில் தங்களது இடம் பறிபோகாமல் இருப்பதற்கு மட்டுமே விளையாடினார்” என்று வருத்தத்துடன் பேசினார்.



