உலக அளவில் கால்பந்துக்கு பின்பு ரசிகர்களிடம் மிகவும் பெற்றுள்ள அணி விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் எனலாம். 19-ஆம் நூற்றாண்டில் துவங்கப்பட்ட இந்த கிரிக்கெட் ஆரம்பகாலங்களில் எண்ணற்ற நாட்களைக் கொண்ட போட்டியாக துவங்கியது. அதனால் வாரக் கணக்காக நடந்தும் முடிவு கிடைக்காமல் நடந்து கொண்டே இருந்த கிரிக்கெட்டை ஒழுங்குபடுத்திய லண்டனின் எம்சிசி அமைப்பு அதை 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளாக மாற்றியது. அதைத் தொடர்ந்து 20-ஆம் நூற்றாண்டில் கிரிக்கெட் விளையாடும் நாடுகள் இணைந்து ஐசிசி எனும் அமைப்பை உருவாக்கி அப்போது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட துவங்கின.

அதனால் 1900 – 1950 வரையிலான காலகட்டத்தில் டெஸ்ட் போட்டிகள் தான் கிரிக்கெட்டின் ஒரே வடிவமாகவும் ரசிகர்கள் பார்க்கும் போட்டிகளாகவும் இருந்தது. ஆனால் அதில் நடைபெறும் 70% போட்டிகள் முடிவை கொடுக்காமல் டிராவில் முடிந்ததால் 5 நாட்கள் அமர்ந்து பார்க்கும் ரசிகர்கள் ஏமாற்றமடையும் வகையில் அமைந்தது. எனவே ரசிகர்களை கவர்வதற்காக ஒரு நாளில் முடிவை காணும் வகையில் 60 ஓவர் போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் உருவாக்கப்பட்டது. அத்துடன் அந்த வகையான கிரிக்கெட்டை மையப்படுத்தி உலக சாம்பியனை தீர்மானிக்கும் உலக கோப்பையும் ஐசிசி அறிமுகப்படுத்தியதால் 1975 முதல் ஒருநாள் கிரிக்கெட் ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டிகளாக மாறியது.
உயிர்தெழுந்த டெஸ்ட்:
நாளடைவில் அதிலும் 10 ஓவர்கள் குறைக்கப்பட்டு 50 ஓவர்களாக மாற்றப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் 90களில் உச்சத்தை பெற்று ரசிகர்களின் அபிமான போட்டிகளாக உருவெடுத்தது. அதன்பின் ஒருநாள் அமர்ந்து பார்க்க முடியாத ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக கடந்த 2005இல் 20 ஓவர்களை கொண்ட போட்டிகள் துவங்கப்பட்டது. அதற்காக டி20 உலகக் கோப்பையும் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அந்த வகையான போட்டிகளில் ஓவருக்கு ஓவர் எதிர்பாராத பரபரப்பான தருணங்கள் நிகழ்ந்து எதிர்பாராத முடிவுகளை கொடுத்ததால் அது வரை நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அசால்டாக பின்னுக்கு தள்ளிய 20 ஓவர் போட்டிகள் ஒருசில வருடங்களிலேயே உடனடியாக நம்பர் ஒன் போட்டிகளாக உருவெடுத்தது.

அதனால் விஸ்வரூபம் கண்ட டி20 கிரிக்கெட்க்கு முன் நிற்க முடியாமல் டெஸ்ட் போட்டிகளின் மவுசு மொத்தமாக குறைந்து போனது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் தான் கிரிக்கெட்டின் உண்மையான இதயம் என்பதை உணர்ந்த ஐசிசி 20 மற்றும் 50 போட்டிகளை போல உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை என்ற பிரத்தியேகமான தொடரை கடந்த 2019இல் அறிமுகப்படுத்தியது. அதன் காரணமாக தரவரிசையில் முதலிடம் பிடித்தால் கோப்பை கிடையாது, மாறாக லீக் சுற்றில் வென்று புள்ளிகளைப் பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி சென்று எதிரணியை தோற்கடித்தால் தான் கோப்பையை வெல்ல முடியும் என்ற நிலைமை உருவானது.
அழிவில் ஒன்டே:
அதனால் ட்ரா செய்யாமல் எப்படியாவது வென்றாக வேண்டும் என்ற மனப்பான்மை அனைத்து அணிகளிடமும் ஏற்பட்டதால் சமீப காலங்களில் டெஸ்ட் போட்டிகள் உயிர்த்தெழுந்து டி20 கிரிக்கெட்டுக்கு நிகரான புத்துயிர் பெற்றுள்ளது. ஆனால் அதிரடிக்கும் பொறுமைக்கும் இடையே நிற்கும் ஒருநாள் கிரிக்கெட் திடீரென்று மவுசு குறையத் துவங்கியுள்ளது. ஐபில் உள்ளிட்ட அதிகப்படியான பிரிமியர் லீக் டி20 தொடர்கள் உருவானதே அதற்கு காரணமாக அமைகிறது. ஏனெனில் பணத்திற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் டி20 கிரிக்கெட், தரத்தை நிரூபிப்பதற்கு டெஸ்ட் கிரிக்கெட் என்ற வகையில் சமீப காலங்களில் கிரிக்கெட் வீரர்கள் அந்த 2 போட்டிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

அதற்கு பேன் ஸ்டோக்ஸ் சிறந்த உதாரணமாக சமீபத்தில் ஓய்வு பெற்றார். மேலும் பரபரப்பான தருணங்களை கொண்ட டி20 போட்டிகளிலும் எந்த தருணத்திலும் முடிவு மாறலாம் என்ற எதிர்பார்ப்பை கொண்டுள்ள டெஸ்ட் போட்டிகளிலும் உள்ள சுவாரஸ்யம் ஒருநாள் கிரிக்கெட்டில் இருப்பதில்லை. அதாவது ஒருநாள் கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகள் ரசிகர்கள் எதிர்பார்க்கும் முடிவையே கொடுக்கின்றன. இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டும் அல்லது நிறுத்திவிட வேண்டும் என்று வாசிம் அக்ரம், இயன் பிசப் போன்ற முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
அப்ரிடியின் ஆலோசனை:
இந்நிலையில் 50 ஓவர்களை கொண்ட ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஓவர்களை குறைத்தால் ஒருநாள் கிரிக்கெட் புத்துயிர் பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி ஆலோசனை தெரிவித்துள்ளார். இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“ஒருநாள் கிரிக்கெட் தற்போது அலுப்பு தட்டும் வகையில் மாறிவிட்டது. எனவே அதை புதுப்பிக்க 50 ஓவர்களில் இருந்து 40 ஓவர்களாக மாற்றினால் மீண்டும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் பொழுதுபோக்காக இருக்கும் என்று நான் பரிந்துரைப்பேன்” என்று கூறினார். ஆரம்ப காலங்களில் 60 ஓவர்களாக துவங்கப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் பின்பு 50 ஓவர்கள் குறைக்கப்பட்ட பின்பு தான் பெரிய வரவேற்ப்பு பெற்றது. எனவே அப்ரிடி கூறும் இந்த ஆலோசனையும் ஒரு வகையில் ஒருநாள் கிரிக்கெட்டை உயிர்ப்பிக்க உதவலாம்.



