அஷ்வினை குப்பை மாதிரி பயன்படுத்துறாங்க, இந்திய தேர்வுக்குழு மீது முன்னாள் வீரர் அதிருப்தி – முழுவிவரம்

Ashwin
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வந்த கிரிக்கெட் போட்டிகள் ஜூலை 17-ஆம் தேதியுடன் நிறைவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு பறக்கும் இந்தியா அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. ஜூலை 22-ஆம் தேதி துவங்கும் இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் ஓய்வெடுப்பதால் ஷிகர் தவான் தலைமையிலான இந்தியா விளையாடுகிறது. அதை தொடர்ந்து வரும் ஜூலை 29-ஆம் தேதி துவங்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு கேப்டன் ரோகித் சர்மா திரும்புகிறார். அவரது தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின் 8 மாதங்கள் கழித்து மீண்டும் இந்திய வெள்ளை பந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Ashwin-3

அஷ்வின் கம்பேக்:
உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டதால் கடந்த 2010இல் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2011 முதல் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக உருவெடுத்தார். அதனால் 2012, 2013, 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஐசிசி உலக கோப்பைகளில் அவரை வளர்த்த அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி தலைமையில் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக விளையாடினார். ஆனால் 2017இல் தோனி கேப்டனாக விலகியதும் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் சுமாராக பந்துவீசினார் என்பதற்காக அவரை மொத்தமாக கழற்றி விட தொடங்கினார்.

மேலும் சஹால் – குல்தீப் யாதவ் ஆகியோரை முதன்மை சுழல் பந்துவீச்சு கூட்டணியாக ஆதரித்து வாய்ப்பளித்த அவர் டெஸ்ட் போட்டிகளிலும் குல்தீப் யாதவை போட்டியாக கொண்டுவர முயற்சித்த போதிலும் அதற்கு இடம் கொடுக்காத வகையில் அஷ்வின் அபாரமாக செயல்பட்டார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வந்த அவரை இந்திய அணி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்ததால் அவரின் வெள்ளை பந்து கிரிக்கெட் வாழ்க்கை முடிந்ததாகவே அனைவரும் நினைத்தனர். அந்த நிலையில் 2019 உலக கோப்பைக்கு பின்பு தோனி ஓய்வு பெற்றதால் ஆட்டம் கண்ட சஹால் – குல்தீப் ஜோடி பார்மை இழந்து சுமாராக பந்து வீசிய நிலையில் ஐபிஎல் தொடரில் வழக்கபோல அஷ்வின் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

ashwin

நிலையற்ற வாய்ப்பு:
அதோடு இந்திய நிர்வாகத்தில் விராட் கோலியின் அதிகாரமும் குறைந்ததால் கடந்த 2021இல் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் நேரடியாக தேர்வான அஷ்வின் 4 வருடங்களுக்குப் பின் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்து அசத்தினார். அந்த உலகக் கோப்பையில் முழுமையாகக் கிடைக்காத போதிலும் கிடைத வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்ட அவர் அதன்பின் நவம்பரில் சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்து டி20 தொடரிலும் அசத்தினார்.

அதனால் கடந்த ஜனவரியில் தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த ஒருநாள் தொடரில் பங்கேற்று காயத்தால் வெளியேறி குணமடைந்த அவரை அதன்பின் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரில் தேர்வுக்குழு மீண்டும் கண்டுகொள்ளவில்லை. மேலும் ஐபிஎல் 2022 தொடரில் பந்துவீச்சில் அசத்தி பேட்டிங்கில் முதல் முறையாக அரைசதம் அடித்த போதிலும் அதன்பின் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து போன்ற டி20 தொடர்களில் மீண்டும் அஷ்வினை தேர்வு செய்யவில்லை.

Ravichandran Ashwin RR .jpeg

ஆனால் தற்போது மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என கேள்வி எழுப்பும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வுக் குழுவினர் அஷ்வினை குப்பை போல பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அஷ்வின் அணிக்கு திரும்பியுள்ளது சுவாரஸ்யமானது. இருப்பினும் இதன் பின்னணியில் என்ன தொலைநோக்கு பார்வை உள்ளது? ஏன் கடந்த 8 – 10 மாதங்களாக அவர் அணியில் இல்லை? டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய அவர் எதனால் ஒதுக்கப்பட்டு தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்?”

“சொல்லப்போனால் கம்பேக் கொடுத்த அவர் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடி சிறப்பாகவே செயல்பட்டார். அதன்பின் அவருக்கு அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நீங்கள் அவரை இலங்கை மற்றும் தென்னாபிரிக்க டி20 தொடரிலும் விளையாடியிருக்க வேண்டும். மேலும் சமீபத்தில் இங்கிலாந்தில் அவர் இருந்த போதும் அங்கு நடந்த டி20 தொடரிலும் அவரை பயன்படுத்தவில்லை” என்று தேர்வுக் குழுவினரின் நிலையற்ற தேர்வை விமர்சித்தார்.

chopra

சஹால், ரவி பிஷ்னோய், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவிந்திர ஜடேஜா என அணியில் இருக்கும் அனைத்து சுழல் பந்து வீச்சாளர்களும் லெக் ஸ்பின்னர் அல்லது இடதுகை சுழல்பந்து வீச்சாளர்களாக இருப்பது இந்திய அணிக்கு பாதகத்தை ஏற்படுத்தியது. எனவே நல்ல ஆஃப் ஸ்பின்னர் இல்லை என்பதாலேயே தற்போது கூட தேவைக்காக இந்திய நிர்வாகம் அஷ்வினை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement